"மரியாதை வேண்டும்!" தெலுங்கானா முதல்வர் சர்ச்சை கருத்து! சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்த பிஆர்எஸ் தலைவர் கவிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், இது தொடர்பாகத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சில கருத்துகளைக் கூறியிருந்தார். இதற்கிடையே ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆம் ஆத்மி தலைவர்கள் மட்டுமின்றி பிஆர்எஸ் தலைவர் கே சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் இந்த வழக்கில் கைதாகி இருந்தார்.

பல மாதங்கள் சிறையில் இருந்த அவருக்குச் சமீபத்தில் தான் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கிடையே கவிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறிய சில கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பின.
ரேவந்த் ரெட்டி: இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூறுகையில், "டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்க 15 மாதங்கள் ஆனது.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட இன்னும் சிறையில் இருக்கிறார். ஆனாலும், கவிதாவால் ஐந்து மாதங்களில் ஜாமீன் பெற முடிந்தது. பாஜகவுக்கும் பிஆர்எஸ் கட்சிக்கும் இடையே இருக்கும் உறவையே இது காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
அதிருப்தி: இதற்கிடையே ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்துக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறுகையில், "நீங்கள் சொன்ன கருத்து எப்படி இருக்கிறது என்று பாருங்கள்... நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்பதைப் படித்துப் பார்த்தீர்களா? கொஞ்சம் படித்துப் பாருங்கள். ஒரு முதல்வர் இதுபோலத் தான் பேசுவாரா?" என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களை நோக்கி அதிருப்தி தெரிவித்தனர்.
ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாகக் கடந்த 2015ம் ஆண்டு தொடரப்பட்ட பண மோசடி வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையின் போது தான் நீதிபதிகள் இந்த காட்டமான கருத்துகளைத் தெரிவித்தனர். ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக ரேவந்த் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையைத் தெலுங்கானாவில் இருந்து போபாலுக்கு மாற்றக் கோரிய மனுவை விசாரித்த போது தான் இந்த கருத்துகளை நீதிபதிகள் தெரிவித்தனர்
கடைமையைச் செய்கிறோம்: நீதிபதி கவாய் மேலும் கூறுகையில், "நீதிமன்றத்தின் உத்தரவுகளில் என்ன அரசியல் இருக்கும்? ஒரு அரசியல் கட்சியுடன் கலந்தாலோசித்து பிறகு தான் நாங்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமா? யாரோ ஒருவர் விமர்சிப்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்கள் மனசாட்சிப்படி நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்" என்றார்.
மரியாதை தேவை: அப்போது ரேவந்த் ரெட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோகத்கி, "முதலமைச்சரிடம் பேசி சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்கிறேன்" என்று உறுதியளித்தார். அதற்கு நீதிபதிகள், "எங்கள் தீர்ப்புகளை விமர்சிப்பது குறித்து எங்களுக்குக் கவலை இல்லை. வெளியில் இருந்து வரும் அழுத்தங்கள், கருத்துகளைப் பொருட்படுத்தாமல் நீதித்துறை பாரபட்சமின்றி தனது கடமைகளைத் தொடர்ந்து செய்யும். ஒருவர் என்ன பேசுகிறோம் என்பதை உணர வேண்டும். நிறுவனங்கள் மீது பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும்" என்றனர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், "அவரது இந்த கோரிக்கையை நாங்கள் ரத்து செய்யவில்லை. நாங்கள் எப்போதும் சட்டமன்றத்தில் தலையிடுவது இல்லை. அவர்களும் அதையே செய்தால் நல்லது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications