இஎம்ஐ ஒத்திவைப்புக்கு வட்டி.. மக்கள் கஷ்டம் புரியாதா.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: கடன் ஒத்திவைப்பு தொடர்பான அறிவிப்பு முறையாக செயல்படுத்தப்படவில்லை, வட்டிக்கு வட்டி போடப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத மத்திய அரசை, உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
கொரானா நோய்த்தொற்று காரணமாக மத்திய அரசு, நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர்.
தொழில்கள் நடைபெறாததால் மக்கள் வாழ்வாதாரம் இன்றி உணவுக்கே, கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில், கடனுக்கான இஎம்ஐ செலுத்துவது மற்றொரு பாரமாக மாறியது.

கால நீட்டிப்பு
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை செலுத்துவோருக்கு மூன்று மாதம் காலநீட்டிப்பு தரப்பட்டது. அதாவது, அந்த மூன்று மாதமும் அவர்கள் கடன் செலுத்த தேவையில்லை. அதற்குப் பிறகு செலுத்த ஆரம்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு நீடிப்பு மற்றும் தொழில்கள் வளர்ச்சி பெறாத காரணத்தால் மறுபடியும் கால நீட்டிப்பு செய்து ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கடன் ஒத்திவைப்பு சலுகை தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

நடைமுறை
அறிவிப்பு என்னவோ நன்றாக இருந்தது. ஆனால் எதார்த்தத்தில் கடன் ஒத்திவைப்பு சலுகையை ஏற்பதற்கு பெரும்பாலான மக்கள் தயாராக இல்லை. இதற்கு காரணம், இவ்வாறு ஒத்திவைக்கப்படும் காலத்தில் செலுத்தவேண்டிய நிலுவை தொகைக்கு வட்டியை வசூலித்தது வங்கிகள் மற்றும் கடன் அளிக்கும் நிறுவனங்கள். ஏற்கனவே பண பிரச்சனையில் சிக்கியுள்ள மக்கள் வட்டியை சேர்த்து கட்ட வேண்டுமா என்று யோசித்து அதற்கு பதிலாக வழக்கம்போலவே இஎம்ஐ கட்டி விடுகிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். எனவே, இந்த அறிவிப்பு ஏட்டளவில் இருந்ததே தவிர, மக்களுக்கு பயன் கொடுக்கவில்லை.

கண்டனங்கள்
இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் பல தொடரப்பட்டன. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் பதிலை கேட்டிருந்தது. வழக்கு விசாரணை இன்று மறுபடியும் நீதிமன்றம் வந்தபோது, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு, நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். எனவே காட்டமான கருத்துக்களையும் கண்டனத்தையும் உச்சநீதிமன்றம் முன்வைத்தது.

பேரிடர் சட்டம் இருக்கிறதே
உங்கள் வணிகத்தில் மட்டும் கவனம் வைத்தால் போதாது, கஷ்டப்படும் மக்கள் மீது கவனம் வைக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்குப் பின்னால் மத்திய அரசு ஒளிந்து கொண்டது போல தெரிகிறது. மத்திய அரசுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த விஷயத்தில் முடிவெடுப்பதற்கு ஏகப்பட்ட அதிகாரம் உள்ளது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி இஎம்ஐ தள்ளுபடி அல்லது காலக்கெடு நீட்டிப்பு மற்றும் இஎம்ஐ தொகை மீதான வட்டி வசூலிப்பதை தடை செய்வது உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசு எடுக்க முடியும்.

வட்டிக்கு வட்டி
வட்டிக்கு வட்டி போடும் இந்த நிலைமையை மாற்ற முடியும். ஆனால் மத்திய அரசு அதை செய்யவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இன்னும் ஒரு வாரத்திற்குள் தனது பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு வட்டி தள்ளுபடி செய்யப்படுவது, வட்டிக்கு வட்டி போட்டு நிறுத்தப்படுவது என்பது பற்றியெல்லாம் உச்ச நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி
முன்னதாக, கடந்த ஜூன் 4ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு அறிவிப்பில், இஎம்ஐ ஒத்திவைப்பு மீது விதிக்கப்படும் வட்டியை தள்ளுபடி செய்தால் வங்கிகளுக்கு இரண்டு லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், வங்கி நிர்வாகிகள், செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறுகையில், வட்டியை தள்ளுபடி செய்தால், வங்கிகளுக்கு நிதி சுமை அதிகரித்து விடும். அதை தாங்கும் திறமை வங்கிகளுக்கு கிடையாது. எனவே, இந்த நிதி சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டியது மத்திய அரசுதான் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications