எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு.. "நிரந்தரமாக கோர முடியாது.." உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு
டெல்லி: எஸ்சி, எஸ்டி தொகுதிகள் குறிப்பிட்ட ஒரு தொகுதியாகவே தொடர்ந்து இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வாக்காளர்களோ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களோ உரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல்களில் எஸ்சி, எஸ்டி தொகுதிகளுக்கான இடஒதுக்கீட்டை சுழற்சி முறையில் மாற்றுவது தொடர்பான மகாராஷ்டிர அரசின் புதிய விதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதி உள்ளாட்சி தேர்தல்களில் இடஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்றுவது தொடர்பான 2025ம் ஆண்டு விதிகளின் 12-வது பிரிவை எதிர்த்து ரூபாலி இந்திரபூஷன் சோண்டே என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதாவது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்காக ஒதுக்கப்படும் தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்றுவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இட ஒதுக்கீடு
இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தால் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டு சுழற்சி முறை பாதிக்கப்படலாம் என்று வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக எஸ்சி, எஸ்டி மக்கள் தொகை குறைவாக உள்ள தொகுதிகள் அடுத்தடுத்த தேர்தல்களிலும் இடஒதுக்கீட்டின் கீழ் வராமல் போகும் வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விதி தன்னிச்சையானது என்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு வழங்கும் சமத்துவ உரிமையை மீறுவதாகவும் அவர் வாதிட்டார். முதலில் இது தொடர்பாக அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தள்ளுபடி
இந்த வாதங்களை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீடும் தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்றுவதும் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டியவை என்றாலும் குறிப்பிட்ட ஒரு தொகுதியை தொடர்ந்து இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்க எந்தவொரு வாக்காளருக்கோ வேட்பாளருக்கோ தனிப்பட்ட உரிமை கிடையாது என்று தெரிவித்தது.
எஸ்சி, எஸ்டி மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இருப்பினும், இந்த நடைமுறையை எப்போது, எப்படி செயல்படுத்துவது என்பது அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்று நீதிபதி ஜாய்மால்யா பாக்சி குறிப்பிட்டார். மேலும், 2025ம் ஆண்டு திருத்தத்துக்கு பிறகு நடைபெறும் அடுத்த தேர்தலே, இடஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்றுவதற்கான புதிய தொடக்கப் புள்ளியாக அமையும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஏற்க முடியாது
தொடக்க புள்ளியை மீண்டும் நிர்ணயிப்பதால் இடஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறை பயனற்று போய்விடும் என்ற மனுதாரரின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. புதிய விதி இடஒதுக்கீட்டின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது என்று சொல்லவும் எந்தவொரு காரணமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றம்
இதற்கிடையே பல ஆண்டுகளாக சில சட்டமன்ற தொகுதிகள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுழற்சி முறையில் மாற்றாமல் தொடர்ந்து இடஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த நவம்பர் 4ம் தேதி அந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
