ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்.. மாநில அரசுகளிடம் அபராதம் வசூலிப்போம்! உச்ச நீதிமன்றம் காட்டம்
டெல்லி: தெருநாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து வழக்கைக் கடந்த சில காலமாகவே உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.. இன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து அபராதம் விதிக்கப்படு, இழப்பீடாக வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாய்க்கடி பிரச்சினை பெரிய விஷயமாக மாறியிருக்கும் நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம்
நாய்க்கடி விவகாரங்களைத் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், நாய்க்கடிகளால் குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு மரணம் அல்லது காயத்திற்கும், மிகப் பெரிய தொகையை இழப்பீடு நிர்ணயிப்போம் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. மேலும், தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களே நாய்க்கடி சம்பவங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்தார்.
நீதிபதிகள் மேலும், "மாநிலங்களின் கருத்துகளைக் கேட்க நாங்கள் அரை நாள் செலவிட வேண்டும். நாய்க்கடி பிரச்சினையைச் சமாளிக்க அவர்களிடம் எதாவது செயல் திட்டம் உள்ளதா இல்லையா என்று பார்க்க வேண்டும். நாங்கள் சட்டப்பூர்வ விதியை அமல்படுத்துவதை மட்டுமே விரும்புகிறோம். எங்களை அதைச் செய்ய அனுமதிக்கவும். இது நீதிமன்ற நடவடிக்கை என்பதைத் தாண்டி பொது விவாதம் நடத்தும் இடம் போல மாறிவிட்டது.
பெரிய இழப்பீடு வசூலிப்போம்
தெரு நாய் விவகாரத்தைச் சமாளிக்க மாநில அரசுகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பது போலத் தெரியவில்லை.. செயல்படாமல் இருக்கும் மாநிலங்களிடம் ஒவ்வொரு நாய்க்கடிக்கும், ஒவ்வொரு மரணத்திற்கும் பெரும் இழப்பீடு தொகையை நிர்ணயிப்போம். மேலும், நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கும் பொறுப்பு உண்டு" என்று எச்சரித்தது.
தெருநாய்கள் குறித்த வழக்கில் நாய்கள் விவகாரம் "உணர்ச்சிப்பூர்வமானவை" என்று வழக்கறிஞர் மேனகா குருஸ்வாமி குறிப்பிட்ட நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. மேனகா இந்தக் கருத்துகளைக் கூறியபோது இடைமறித்த சுப்ரீம் கோர்ட் அமர்வு, "உங்கள் எமோஷன் எல்லாம் நாய்களுக்கு மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது" என்றார்.
வீட்டிற்கே கூட்டிச் செல்லுங்கள்
இதற்குப் பதிலளித்த குருஸ்வாமி, "நான் அப்படிச் சொல்லவில்லை அப்படியல்ல. மனிதர்கள் குறித்தும் நான் சமமாகக் கவலைப்படுகிறேன்" என்றார். உடனடியாகக் குறுக்கிட்ட நீதிபதி விக்ரம் நாத், "நல்லது. அப்போது நாய்களை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். ஏன் நாய்கள் தெருக்களில் சுற்றுகின்றன.. கடிக்கின்றன, மக்களைப் பயமுறுத்துகின்றன?" என்று கேள்வியெழுப்பினார். இப்படி இன்றைய தினம் வழக்கு விசாரணை காரசாரமாக நடைபெற்றது. இன்றைய வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கு விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
பின்னணி
தெருநாய்கள் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இருக்கும் தெருநாய்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடங்களில் இருக்கும் நாய்களைக் காப்பகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நாய்களை, பிடிபட்ட அதே இடத்திற்கு மீண்டும் விடக்கூடாது என்றும் அமர்வு குறிப்பிட்டது.












Click it and Unblock the Notifications