"எந்த அடிப்படையில் ரூ.2,000க்கு மேல் UPIக்கு கட்டணம் விதித்தீர்கள்?" அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேநேரத்தில் இந்தக் கட்டணம் எந்த சட்ட அடிப்படையில் விதிக்கப்பட்டது.. 0.4% என்பது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்பது விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நமது நாட்டில் இப்போது பெரும்பாலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமாகவே நடைபெறுகிறது. பெட்டிக்கடையில் 10 ரூபாய் கொடுப்பது முதல் இன்ப சுற்றுலாவுக்கு லட்ச கணக்கில் செலுத்துவது வரை அனைத்திற்குமே யுபிஐ தான் பயன்படுத்துகிறார்கள். இந்த சூழலில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையே இந்த யுபிஐ கட்டணத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் அஞ்சன் தத்தா தாக்கல் செய்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
புதிய விதிகளின்படி நண்பர்களுக்கு பணம் அனுப்ப கட்டணம் எதுவும் இருக்காது. அதேநேரம் கடைக்காரர்களுக்கு, அதாவது Person-to-Merchant (P2M) யுபிஐ பரிவர்த்தனைகளில் ரூ.2,000க்கு மேல் செலுத்தப்படும் தொகைக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும். ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டணம்
ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள், விவசாய இடுபொருட்கள் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு ரூ.2,000க்கு மேல் செலுத்தப்படும் பரிவர்த்தனைகளில் ரூ.5 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூலதன சந்தை தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு 0.02% கட்டணம் விதிக்கப்படும்.
ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது. மாதத்திற்கு யுபிஐ மூலம் ரூ.1 லட்சம் வரை பெறும் சிறு வணிகர்களுக்கும் இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது புதிய கட்டண முறையால் சுமார் 96% வணிக யுபிஐ பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கேள்வி
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, "இந்த MDR என்பது வரியா அல்லது அரசு கட்டணமா? அப்படி இல்லையென்றால்.. இதை வசூலிப்பதற்கான நிர்வாக அதிகாரம் அரசுக்கு எங்கிருந்து வருகிறது" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கடராமன், "MDR என்பது வரியும் அல்ல, அரசு கட்டணமும் இல்லை. இந்த பணம் அரசுக்கு செல்லாது. யுபிஐ பரிவர்த்தனையை செயல்படுத்தும் வங்கிகள் உள்ளிட்ட கட்டண அமைப்பில் ஏற்படும் செலவுகளை ஈடுகட்டுவதற்கான தொகை தான் இது" என்று விளக்கினார்.
தடை விதிக்க மறுப்பு
ரூ.2,000 என்ற வரம்பு மற்றும் சிறு வணிகர்களுக்கான ரூ.1 லட்சம் மாதாந்திர வரம்பு எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்து போதிய விளக்கம் வெளியிடப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், வணிகர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டால், அவர்கள் அந்த செலவை வாடிக்கையாளர்களிடம் மாற்றக்கூடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், MDRக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேநேரம் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, என்பிசிஐ உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், புதிய கட்டண முறைக்கான சட்ட விளக்கத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
