"சொன்னதே பொய்!" சண்டிகர் தேர்தல் அதிகாரியின் இரு தவறுகள்! லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கிய நிலையில், இந்த வழக்கில் தேர்தல் நடத்தும் அதிகாரியைத் தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.
கடந்த மாதம் சண்டிகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளராக குல்தீப் குமாரும், அவருக்கு எதிராக பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் களமிறங்கினார்.

இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்குத் தேவையான கவுன்சிலர்கள் ஆதரவு இருந்த நிலையில், அவர் எளிதாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி தருவதாக இருந்தது.
உச்ச நீதிமன்றம்: ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களின் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடர்ந்து ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
சண்டிகர் மேயர் தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹ்வால் 8 வாக்குகள் செல்லாது என அறிவித்து இருந்த நிலையில், அந்த முடிவை மாற்றி ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு அந்த வாக்குகள் போடப்பட்டதாகக் கருதப்படும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.. இந்த வழக்கில் நீதிமன்றம் தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹ்வாலை கடுமையாகச் சாடியது.
தேர்தல் அதிகாரி: தொடக்கம் முதலே தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹ்வால் நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட் விமர்சித்து இருந்தது. கடந்த பிப். 5ஆம் தேதி இந்த வழக்கு முதலில் விசாரணைக்கு வந்த போதும், சுப்ரீம் கோர்ட் தேர்தல் அதிகாரி நடத்தை ஜனநாயகத்தைப் படுகொலை செய்வது போன்றது என்றும் அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. மேலும், வாக்குச் சீட்டுகளைச் சிதைத்த தேர்தல் நடத்திய அதிகாரியை விசாரிக்க வேண்டும் என்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று போய் சொல்லுங்கள் என்றும் காட்டமான கருத்துகளைக் கூறி இருந்தது.
இதையடுத்து இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அப்போதும் சண்டிகர் மேயர் தேர்தல் நடத்தும் அதிகாரியைக் கடுமையாக நீதிபதிகள் விமர்சித்தனர். அவர் மீது ஒன்று இல்லை இரண்டு குற்றச்சாட்டுகளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

இரண்டு தவறுகள்: அதாவது இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜரான அதிகாரி அனில் மசிஹ்வால், வாக்குச்சீட்டுகள் செல்லாதவை என்று கருதியதாலேயே அதில் எழுதியதாகக் கூறியிருந்தார். இதைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "இந்த நீதிமன்றத்தில் நேற்று, அந்த அதிகாரி வாக்குச் சீட்டுகள் சிதைக்கப்பட்டதைக் கண்டறிந்ததால் அதில் எழுதியதாகக் கூறினார். ஆனால், வாக்குச் சீட்டுகள் எதுவும் அதற்கு முன்பு சிதைக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
தேர்தல் நடத்தும் அதிகாரியின் நடத்தை இரண்டு குற்றங்கள் இருக்கிறது. முதலில் அவர் தனது நடத்தை மூலம், அவர் மேயர் தேர்தலின் போக்கைச் சட்டவிரோதமாக மாற்றியுள்ளார். குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக அவர் இப்படிச் செய்துள்ளார். அடுத்து இந்த நீதிமன்றத்தில் அவர் பொய்யான கருத்தைக் கூறி இருக்கிறார். இதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications