குழந்தைகளின் ஆபாச படத்தை பார்ப்பது குற்றமில்லையா? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு ரத்து!
டெல்லி: சிறார் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில், இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
இளைஞர் ஒருவர் குழந்தைகளின் ஆபாச படத்தை பார்த்ததாக கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த விசாரணையை எதிர்த்து இளைஞர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் நீதிபதி வழங்கிய உத்தரவு நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதாவது, "குழந்தைகள் நடித்த ஆபாச விடியோவை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை. மற்றவர்களுக்கு அனுப்பினால் மட்டுமே குற்றம்" என்று கூறி, வழக்கிலிருந்து இளைஞரை விடுவித்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு சமூக ஆர்வலர்கள், குழந்தைகள்/பெண்கள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. கடந்த மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை தொடங்கியபோது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "ஒரு தனி நீதிபதி எப்படி இதுபோன்ற கொடூரமான கருத்தை கூற முடியும்?" என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மட்டுமல்லாது அவருடைய கருத்து 3 வாரத்திற்குள் திரும்ப பெறப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இப்படியாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், குழந்தைகள் ஆபாச படம் என்பதற்கு பதிலாக, குழந்தைகள் பாலியல் மற்றும் மோசடிகள், சுரண்டல் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. குழந்தைகள் ஆபாச படம் என்ற சொல்லாடலை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் போக்சோ சட்டத்தின் படி குழந்தைகள் சார்ந்த ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே அது குற்றம்தான் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications