அமலாக்கத்துறையால் முடியுமா.. செந்தில் பாலாஜி கேஸில் சுப்ரீம் கோர்ட் மேஜர் கேள்வி.. மத்திய அரசு பதில்
டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய ஊழல் வழக்கில் விசாரணை முடியாமல் அமலாக்கத்துறை வழக்கை விசாரித்து தண்டிக்க சட்டம் அனுமதிக்கிறதா? என உச்ச நீதிமன்றம் நேற்று வழக்கு விசாரணையின் போது கேள்வி எழுப்பியது. அதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அளித்த பதில்களையும் நேற்று நடந்த வாதம் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் ஜாமீன் கோரி வழக்கறிஞர் ராம் சங்கர் என்பவர் மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத் துறை சார்பில் வழக்கறிஞர் சோயிப் ஹுசைன் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறும் போது, 'பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜிக்கும், சண்முகம், கார்த்திக் ஆகியோருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றப்பட்ட 'ஹார்டுடிஸ்கில்' கார்த்தி வங்கி கணக்கு தொடங்க விண்ணப்பம் அளித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
செந்தில் பாலாஜி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு நடத்திய சோதனையில் 38 ஆவணங்களும், 'எச்.பி. ஹார்டு டிஸ்க்'கும், டெபாசிட் ரசீதுகள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விரிவாக திட்டமிடப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட முயன்றார். அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த லஞ்ச ஊழல் வழக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். எனவே ஊழல் வழக்கு விசாரணை நடைபெறாமல், பண மோசடி தடுப்பு சட்ட வழக்கு விசாரணையை நடத்தி தண்டிக்க முடியுமா?' என கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'ஊழல் வழக்கு விசாரணையும், அமலாக்கத் துறை வழக்கு விசாரணையும் ஒரே நேரத்தில் நடைபெறலாம். ஆனால், அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை முடிக்க முடியாது' என்றார். வாதங்களைப் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் விசாரணையை வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. அன்று தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது குறித்து தெரியவரும்.












Click it and Unblock the Notifications