கட்டாய மத மாற்றம் ஏதும் இல்லை-மத மாற்ற தடை சட்டம் கோரும் மனுவை டிஸ்மிஸ் செய்க: தமிழ்நாடு அரசு
டெல்லி: தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மத மாற்றம் ஏதும் நடைபெறவில்லை; ஆகையால் அனைத்து மாநிலங்களிலும் மத மாற்ற தடை சட்டம் கொண்டுவர கோரும் மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் ஒரு பொதுநலன் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், கட்டாய மத மாற்றங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தக் கூடிய மத மாற்ற தடை சட்ட வரைவை உருவாக்க சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியல் சாசனத்தின் 21, 25வது பிரிவுகளின் படி ஒவ்வொரு குடிமகனும் தமக்கான மதத்தைப் பின்பற்ற உரிமை உள்ளது. தங்களது மதத்தை அமைதியான முறையில் பரப்பவும் உரிமை இருக்கிறது.
எந்த ஒரு தனிநபரையும் கட்டாயமாக மத மாற்றம் செய்யக் கூடாது என்பதை மாநில அரசு ஏற்றுக் கொள்கிறது. அதேநேரத்தில் தாம் விரும்புகிற மதத்தை ஏற்கக் கூடிய உரிமையை தனிநபருக்கு அரசியல் சாசனம் வழங்கி உள்ளது. இதனை நமது அரசியல் சாசனம் தடுக்கவில்லை. கிறிஸ்தவ மிஷினரிகள் தங்களது மதத்தை அமைதியான முறையில் பரப்புகின்றனர். மதம் சார்ந்த நடவடிக்கைகளில் மிஷினரிகள் சட்டவிரோதமாக செயல்படுவதாக க்ண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மத மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. மத மாற்ற தடை சட்டம் அமலில் உள்ள மாநிலங்களிலும் இந்த சட்டம் எந்த தண்டனையையும் வழங்கிவிடவில்லை. இவ்வழக்கை தாக்கல் செய்த மனுதாரர், கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக உள்நோக்கத்துடன் தொடர்ந்துள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய மத மாற்ற தடை சட்டம் என்பது பொருந்தாது. ஆகையால் இந்த மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தஞ்சை லாவண்யா மரணத்தை முன்வைத்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications