"கொரோனா உயிரிழப்புகள்.. அரசின் டேட்டாக்களில் உண்மை இல்லை"- இழப்பீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் காட்டம்
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தோருக்கு வழங்கப்படும் இழப்பீடு விண்ணப்பங்களை சில மாநிலங்கள் அதிகளவில் நிராகரித்து வரும் நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு நாடுகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வல்லரசு நாடுகள் கூட கொரோனாவால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டன.
இந்தியாவில் முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் டெல்டா கொரோனாவால் மோசமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

உயிரிழப்புகள்
அதன்படி பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களும் இழப்பீடு தொடர்பான விண்ணப்பங்களை அதிகம் நிராகரிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
இது தொடர்பாக நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி. நாகரத்னா அமர்வு கூறுகையில், "கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக அரசின் இறப்பு புள்ளிவிவரங்களில் உண்மை இல்லை. எனவே, இழப்பீடு விண்ணப்பங்களை மோசடியான உரிமைகோரல்கள் என்று கூற முடியாது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததில் இருந்து 10 நாட்களுள் இழப்பீட்டை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

தர்மம் இல்லை கடமை
கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 50,000ஐ மாநில அரசுகள் வழங்குவதை எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி. நாகரத்னா அமர்வு தான் கண்காணித்து வருகிறது. சில மாநிலங்கள் இழப்பீடு வழங்குவதில் காலம் தாழ்த்தி வருவது தொடர்பாக மாநில அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், "மாநில அரசுகள் யாருக்கும் தர்மம் வழங்குவதில்லை. இது அரசின் கடமை. மக்களை அலைக்கழிக்காமல், அவர்களுக்கு உதவும் வழியைப் பாருங்கள். மாநில அரசுகள் இதற்காகத் தனியாக நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

யாரெல்லாம் இழப்பீடு பெறலாம்
கொரோனா உறுதி செய்யப்பட்ட 30 நாட்களில் ஒருவர் உயிரிழந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா உறுதியான 30 நாட்களில் தற்கொலை உள்ளிட்ட எந்த காரணத்தால் உயிரிழந்தாலும் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களிலும் அதிகாரப்பூர்வ உயிரிழப்பைக் காட்டிலும் இழப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநில அரசுகள்
இதனால் பல்வேறு மாநில அரசுகளும் இழப்பீடு விண்ணப்பங்களை நிராகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 2,27,107 இழப்பீடு கோரி விண்ணப்பித்தனர். அவர்களில் 61,848 விண்ணப்பங்களை மகாராஷ்டிர அரசு நிராகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்புகள் 10,094ஆக உள்ள நிலையில், 1,02,230 பேர் இழப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளனர். இதே நிலை தான் பெரும்பாலான மாநிலங்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications