பொன்முடிக்கு பெரும் நிம்மதி! 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.. உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல் முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வாகி அமைச்சர் பதவியை வகித்து வந்தார். இந்த நிலையில் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதாவது, கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும், பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதனிடையே, சிறையில் சரணடைய விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பொன்முடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications