"கொஞ்சமாவது மரியாதை கொடுங்கள்.." உச்ச நீதிமன்றம் வரை போன நூலக புத்தக விவகாரம்! நீதிபதிகள் அதிருப்தி
டெல்லி: டெல்லியில் உள்ள 135 ஆண்டுகள் பழமையான சென்ட்ரல் செகிரேட்டரைட் நூலகத்தின் புத்தகங்களை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு கட்டத்தில் பழமையான அந்த புத்தகங்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கள் என்றும் நீதிபதிகள் கடிந்து கொண்டனர். மேலும், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை புத்தகங்களை அகற்ற கூடாது என கண்டிப்புடன் கூறினர்.
டெல்லியின் சாஸ்திரி பவனில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் செகிரேட்டரைட் நூலகத்தில் சுமார் 8.5 லட்சம் புத்தகங்கள் உள்ளன. மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கட்டிடம் இடிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதனால் அஹ்குள்ள புத்தகங்கள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.

உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நூலகத்தின் புத்தகங்களை அதிகாரிகள் கையாளும் விதம் குறித்து கடும் கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், முறையான திட்டமிடல் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது என்றும் என்று அதிருப்தி தெரிவித்தனர்.
வாதம்
இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிப்ரியா பத்மநாபன், "நவம்பர் மாதத்துக்குள் புத்தகங்களை அவசரமாக மாற்ற அதிகாரிகள் முயல்கிறார்கள்.. எனவே, இந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். முதலில் புதிய இடத்தில் நூலகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். தற்போது பழைய நூலகத்தில் எந்த பரப்பளவில் புத்தகங்கள் உள்ளன மற்றும் புதிய இடத்தில் எவ்வளவு இடம் நூலகத்திற்கு ஒதுக்கப்படும் என்பதை ஒப்பிட்டு காட்ட வேண்டும்" என்றார். மேலும், ஆர்.கே. புரத்தில் கூட பல புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் 15 ஆண்டுகளாக அவை அங்கே இருப்பது ஏன் எனவும் கேட்டார்.
மரியாதை கொடுங்கள்
இதை கேட்ட நீதிபதி சஞ்சய் குமார், புத்தகங்களை இடம் மாற்றுவதில் அதிகாரிகள் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும், "எல்லாவற்றையும் விரைவாக முடித்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் இருக்கிறீர்கள். இந்த புத்தகங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? எந்தத் திட்டமிடலும் இல்லாமல் செயல்படுவது போல் தெரிகிறது. இந்தப் புத்தகங்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கள். 2 லட்சம் புத்தகங்களை காற்றில் வீசுவது போல நடத்துகிறீர்கள். இந்த புத்தகங்கள் நாட்டின் பாரம்பரியத்தின் ஒரு பகுதி" என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, ஆர்.கே. புரத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் துளசி சதன் நூலகத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை என்று விளக்கமளித்தார். இதையடுத்து அந்த புத்தகங்களில் துளசி சதன் நூலகத்தின் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு ஹரிப்ரியா பத்மநாபனிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
அடுத்த விசாரணை வரை புத்தகங்கள் எதுவும் மாற்றப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்தது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தையும் நீதிமன்ற பதிவில் சேர்க்க உத்தரவிடப்பட்டது. மேலும், நவம்பர் 20ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் வரை எந்த புத்தகத்தையும் மாற்றக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications
