“சிறுமியை தாக்குவது சாதாரண விஷயம் இல்லை..” CJP போராட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!
டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் பங்கேற்ற தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக புகார் அளித்ததால் துன்புறுத்தப்பட்டதாக சிறுமி தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி, உத்தர பிரதேச அரசுகளிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆா்வலரான தனது தந்தை தாக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவர் டெல்லி காவல் துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடா்ந்து, தாம் துன்புறுத்தப்பட்டதாகவும், தங்களது வீடு சூறையாடப்பட்டதாகவும் சிறுமி குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சிறுமி தாக்கப்பட்ட வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட சிறுமி மீதே எதிர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறுமியின் வீட்டின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்" என வாதிட்டார்.
மேலும், "போராட்டம் தொடா்பான விவகாரத்தில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு முடிவெடுக்க கால அவகாசம் பிடிக்கும். அதற்குள் சிறுமிக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதை அந்த உயா்நிலைக்குழுவால் சரி செய்ய முடியாது" என வாதிட்டார். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டன.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியே சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து கொண்டு, சிறுமியையோ அவரது குடும்பத்தையோ மிரட்ட முயற்சிப்பது மிகவும் தீவிரமான பிரச்சனை. இது சாதாரண விஷயம் இல்லை. இது மிகவும் கண்டனத்திற்குரியது.
14 வயது குழந்தையை தாக்குவதற்கு அவர்களுக்கு எப்படி மனம் வந்தது? காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆர் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சிறுமிக்கும் அவரது குடும்பத்திற்கும் உ.பி காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக டெல்லி, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications
