ஒட்டுமொத்தமாக ஆளுநர்களுக்கு கடிவாளம் போடப் போகுது உச்சநீதிமன்றம்? டிச-1 விசாரணையில் முக்கிய உத்தரவு?
டெல்லி: நாட்டின் மாநிலங்களின் சட்டசபைகள் நிறைவேற்றுகிற மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்கும் விவகாரத்தை உச்சநீதிமன்றம் டிசம்பர் 1-ந் தேதி விசாரிக்க உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மாநில ஆளுநர்களான ஆர்.என்.ரவி, ஆரீப் முகமது கான் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. மாநில சட்டசபைகளில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மாநிலங்களின் சட்டசபைகள் நிறைவேற்றுகிற மசோதாக்கள் மீது ஆளுநர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அரசியல் சாசனம் கூறுகிறது; இந்த விரைந்து முடிவெடுத்தல் என்பதற்கும் ஒரு கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகளின் கோரிக்கை. இதேபோல ஏற்கனவே தெலுங்கானா, பஞ்சாப் மாநில அரசுகளும் வழக்கு தொடர்ந்திருந்தன.

உச்சநீதிமன்ற கருத்து: இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநிலங்களின் ஆளுநர்கள்- மாநில சட்டசபைகள் நிறைவேற்றுகிற மசோதாக்களை நிறுத்தி வைக்கக் கூடிய அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. மாநிலங்களின் ஆளுநர்கள் என்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மசோதாக்கள் மீது விரைவாக ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும். மாநில சட்டசபைகள் 2-வது முறையாக மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பினால் நிதி மசோதா போல கருதி ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். மாநில அரசுகள், உச்சநீதிமன்றத்தை நாடும் வகையில் ஏன் ஆளுநர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என சரமாரியான கேள்விகளையும் காட்டமான கருத்துகளையும் தெரிவித்திருந்தது தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச்.
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு, கேரளா வழக்குகள்: இன்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு, கேரளா அரசுகளின் மாநில ஆளுநர்களுக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இந்த விசாரணைகளின் போதும் மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை என்பதை திட்டவட்டமாக தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் தெரிவித்தது. இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கவும் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
ஆளுநர்களுக்கு கடிவாளம்: அத்துடன், ஒரு குறிப்பிட்ட ஆளுநர் மசோதாவை தாமதம் செய்கிறார் என்பதற்கு அப்பால், பொதுவாக மாநில சட்டசபைகள் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மாநிலங்களின் ஆளுநர்கள் தாமதம் செய்வது தொடர்பாக டிசம்பர் 1-ந் தேதி விசாரிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் தெரிவித்தது. ஒவ்வொரு மாநிலமும், ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடருவது அதிகரித்து கொண்டே செல்வதால் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்தமாக ஆளுநர்களின் இந்த கால தாமதம் தொடர்பாக மொத்தமாக விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க இருக்கிறது. ஆகையால் டிசம்பர் 1-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பிக்க போகும் உத்தரவு மிக முக்கியமானதாக இருக்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications