பரபர.. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு ரத்து- ஜூலை 11-ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் ஜூலை 11-ந் தேதி விசாரிக்க உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களின் நில உரிமைகள் உள்ளிட்டவைகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால் ஒரு மாநிலத்துக்கு மட்டும் இப்படியான சிறப்புரிமை வழங்கக் கூடாது என்பது இந்துத்துவா அமைப்புகளின் நீண்டகால கோரிக்கை.

பாஜகவும் தமது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்த 370-வது பிரிவை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்து வந்தது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி இந்த 370-வது பிரிவை மத்தியில் ஆளும் பாஜக அரசு திடீரென ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் இரண்டு கூறாக பிளவுபடுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் என்கிற இரு யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. இதனால் ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் மத்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது.
ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட உடனேயே அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். மிக நீண்டகால சிறைவாசத்துக்குப் பின்னரே அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்னமும் அரசியல் நடவடிக்கைகள் முழுமையாக தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் மத்திய பாஜக அரசு, 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரணைக்கு வராமலேயே இருந்து வருகின்றன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஜூலை 11-ந் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகளை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நியமித்தது.
உச்சநீதிமன்றம் ஏற்கனவே விசாரணை நடத்தி அதிக எண்ணிக்கையிலான அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பெஞ்ச், ஜூலை 11-ந் தேதி விசாரணையை நடத்த உள்ளது.












Click it and Unblock the Notifications