ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. தாலிபான்கள் போட்ட திடீர் உத்தரவு.. காரணம் கேட்டால் பெரிய ஷாக்
டெல்லி: சர்வதேச அளவில் மிகப் பெரிய கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் போட்டிகளை ஆப்கனில் ஒளிபரப்ப தாலிபான்கள் தடை விதித்துள்ளன. அதற்கு அவர்கள் அளித்துள்ள விளக்கத்தைக் கேட்டால் நிச்சயம் அனைவருக்கும் தலை சுற்றிவிடும்.
Recommended Video
ஆப்கனில் இப்போது மீண்டும் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளன. அமெரிக்கப் படைகள் இருக்கும் வரை சுமார் 20 ஆண்டுகள் காத்திருந்த தாலிபான்கள், மீண்டும் ஆப்கானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
ஆப்கன் மக்களிடையே இருந்து அமெரிக்க வெறுப்பு தாலிபான்களுக்குச் சாதகமாக இருந்தது. இதனால் வெறும் சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கனை தாலிபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன.

தாலிபான்கள் ஆட்சி
இருப்பினும், 1996 - 2001 வரையிலான ஆட்சியைப் போல மோசமான ஆட்சி இருக்குமோ என அனைவரும் அஞ்சினர். இருப்பினும், இந் அட்சி கடந்த ஆட்சியைப் போல இருக்காது என்று தாலிபான்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்கள் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே இருக்கிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததுமே ஆண் பெண் இருபாலர் சேர்ந்து படிக்கும் Co Education முறைக்குத் தடை விதிக்கப்பட்டது. அதேபோல பொது இடங்களுக்குச் செல்லும் போது பெண்கள் ஆண் துணையின்றி செல்லக் கூடாது என்றும் புர்கா அணிவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல்-க்கு தடை
இந்தச் சூழலில் அடுத்த புதிய உத்தரவாக ஆப்கன் நாடு முழுவதும் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை விதித்து தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ஸ்டேடியங்களில் பெண் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாலும், டேன்ஸ் ஷோக்கள் நடைபெறுவதாலும் தாலிபான்கள் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளன. எந்த ஆப்கன் ஊடகங்களும் ஐபிஎல் போட்டிகளைக் கண்டிப்பாக ஒளிபரப்பு செய்யக் கூடாது எனத் தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு அந்நாட்டிலுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தைத் தரும் வகையிலேயே உள்ளது.

கிரிக்கெட்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கின நடைபெற்று வந்தது. இருப்பினும், அந்தச் சமயத்தில் இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை உச்சமடைந்ததால், ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், இப்போது ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் பல ஆப்கன் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த ஆப்கன் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் ஒரு கருவியாகவே கிரிக்கெட் அங்கு இருந்தது. இந்தச் சூழலில் ஐபிஎல் போட்டிகளுக்குத் தாலிபான்கள் தடை விதித்துள்ளன.

பெண் உரிமை
ஆப்கனில் பெண் உரிமை பாதுகாக்கப்படும் எனத் தாலிபான்கள் கூறி வந்தாலும், அது வெறும் வாய் வார்த்தையாகவே உள்ளது. ஆப்கனில் மொத்தம் 400 விளையாட்டுகளுக்குத் தாலிபான்கள் அனுமதி அளித்துள்ளன. ஆனால், அந்த விளையாட்டுகளைப் பெண்கள் விளையாடலாமா என்பது குறித்து தாலிபான்கள் தெளிவுபடுத்தவில்லை. மேலும், இது தொடர்பாகக் கேள்விகளை எழுப்ப வேண்டாம் என்றும் தாலிபான் ஆட்சியின் விளையாட்டு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் பெண்கள்
அதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன் தாலிபான் செய்தித்தொடர்பாளர் சயீத் செக்ருல்லா ஹாஷிமி, "ஒரு பெண் அமைச்சராக இருக்க முடியாது. அது அவர்களால் முடியாத ஒன்றைத் திணிப்பது போலத் தான். பெண்கள் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என அவசியமில்லை. அவர்கள் வேலை குழந்தைகளைப் பெற்றெடுப்பது. சில பெண்களுக்கு எங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். ஆனால் அவர்களை ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் பெண்களின் பிரதிநிதிகளாகக் கருத முடியாது" என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.












Click it and Unblock the Notifications