அஜித் பட நடிகையின் உறவினர் அடித்து கொலை.. சின்ன பார்கிங் பிரச்சனையால் அரங்கேறிய கொடூரம்! திக்திக்
டெல்லி: இப்போதெல்லாம் சின்ன சின்ன பிரச்சனைக்குக் கூட பலரும் ஓவராக ரியாக்ட் செய்துவிடுகிறார்கள். அது மிக மோசமான விளைவுகளையும் கூட ஏற்படுத்திவிடுகிறது. அப்படி தான் டெல்லியில் ஒரு சின்ன பார்கிங் பிரச்சனையில் அஜித் பட நடிகையான ஹுமா குரேஷி உறவினர் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2023 இறுதியில் வெளியான திரைப்படம் பார்கிங். ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் நடித்திருந்த இந்தப் படம் ஒரு சின்ன பார்கிங் பிரச்சனை எவ்வளவு மோசமாக மாறும் என்பதை எடுத்துக் காட்டியிருந்தது. இந்தப் படத்திற்குத் தான் சமீபத்தில் தேசிய விருதும் கூட வழங்கப்பட்டது. பார்கிங் சிக்கல் எந்தளவுக்கு செல்லும் என்பதை இது காட்டியிருந்து.

அஜித் பட நாயகி
அப்படியொரு மோசமான சம்பவம் தான் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில், பார்கிங் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் பிரபல நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் ஆசிப் குரேஷி கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ரஜினிகாந்த்தின் கலா மற்றும் அஜித் குமாரின் வலிமை ஆகிய படங்களிலும் நடித்தவர். இவரது உறவினர் தான் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதோடு, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், ஆசிப் குரேஷி தனது வீட்டின் வாசலில் இருந்து இருசக்கர எடுத்துச் செல்லும்படி இருவரிடம் கேட்டுள்ளார். அப்போது இது வாக்குவாதமாக மாறிய நிலையில், இந்த இருவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். இருப்பினும், நிச்சயம் திரும்ப வந்து தாக்குவோம் என்று மிரட்டியுள்ளனர்.
என்ன நடந்தது
இது குறித்து ஆசிப் குரேஷியின் மனைவி ஷாஹீன் ஆசிப் குரேஷி கூறுகையில், "இரவு 9:30-10 மணியளவில் அண்டை வீட்டுக்காரர் ஒருவர் எங்கள் வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். என் கணவர் ஆசிப், வாகனத்தை எடுத்துச் செல்லும்படி சொன்னார். அந்த நபர் அப்போது வண்டியை எடுத்தாலும் திரும்பி வந்து தாக்குவேன் என்று ஆசிப்பைத் திட்டி மிரட்டினார்
சில நிமிடங்களில், அந்த நபரும் அவரது சகோதரரும் வந்து, கூர்மையான ஆயுதத்தால் ஆசிப்பைத் தாக்கினர். நான் என் மைத்துனர் ஜாவேத்தை அழைத்தேன்.. ஆனால் அவர் வருவதற்குள் ஆசிப் அதிக ரத்தத்தை இழந்து இறந்துவிட்டார்" என்று ஷாஹீன் மேலும் கூறினார்.
உயிரிழப்பு
மைத்துனர் ஜாவேத் சம்பவ இடத்திற்கு விரைந்தவுடன், ஆசிப் குரேஷியை மீட்டு கிழக்கு கைலாஷில் உள்ள தேசிய இருதய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஆசிப் குரேஷி ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கடந்த காலத்திலும் தனது கணவரைக் கொல்ல முயன்றதாக ஆசிப்பின் மனைவி கூறுகிறார்.
வேதனை
ஹுமா குரேஷியின் தந்தை சலீம் குரேஷி தனது உறவினர் இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் இது குறித்துக் கூறுகையில், "வீட்டின் முன் அந்த இருவரும் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். ஆசிப் அதை அகற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த இருவரும் சேர்ந்து என் அவனைக் கொன்றுவிட்டனர்" என்று அவர் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உஜ்வல் (19) மற்றும் கௌதம் (18) என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாகப் பாரதிய நியாய சம்ஹிதா (BNS) பிரிவு 103இன் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 வயதான ஆசிப் குரேஷி கோழிப்பண்ணை வணிகம் நடத்தி வந்தார்.












Click it and Unblock the Notifications