பின்வாசல் வழியாக சென்ற விஜய்.. சோனியா காந்தி புத்தக விழாவில் நடந்தது என்ன.. வெடித்த சர்ச்சை!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த மற்ற தேசிய தலைவர்கள் அனைவரும் பிரதான நுழைவாயில் வழியாக ஹோட்டலுக்குள் சென்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பின்வாசல் வழியாக ஹோட்டலுக்குள் சென்றது தற்போது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
காங்கிரஸின் மூத்த தலைவரான சோனியா காந்தி, தனது வாழ்க்கை வரலாற்றை 'Belonging: A Journey of Love' என்ற சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார். நாடு முழுக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்றைய தினம் டெல்லியில் உள்ள ஐடிசி மௌரியா ஹோட்டலில் நடைபெற்றது.

புத்தக வெளியீட்டு விழா
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றாக இதில் பங்கேற்றனர். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு சோனியா காந்தி நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். அதை தொடர்ந்து ராகுல் காந்தியும் தொலைபேசியில் அழைத்தார். அதைத் தொடர்ந்தே விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விஜய்
இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு போதிலும், அவர் பிரதான வாசலை தவிர்த்துவிட்டு சென்றது பேசுபொருளாகியுள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சிக்கு வந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஹோட்டலின் பிரதான நுழைவாயில் வழியாகவே உள்ளே சென்றுள்ளனர். குறிப்பாக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அவரே காரை ஒட்டி சென்றனர்.
அதேபோல் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட தலைவர்களும் ஊடகங்கள் காத்திருந்த பிரதான நுழைவாயில் வழியாகவே சென்றனர். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மட்டும் ஊடகங்களின் கண்களில் படாமல் ஹோட்டலின் பின்பக்க நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.
நெட்டிசன்கள் கேள்வி
இது சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியுள்ளது. இது தொடர்பாக நெட்டிசன்கள், "எல்லாத் தலைவர்களும் பிரதான வாசல் வழியாக வரும்போது, முதலமைச்சர் விஜய் மட்டும் பின்வாசல் வழியாக வந்தது ஏன்? பாதுகாப்பு அச்சுறுத்தல் என இருந்தால் அது அனைவருக்கும் தானே? அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் பிரதான வாசல் வழியாகவே சென்ற போது, விஜய் மட்டும் ஊடகங்களை தவிர்த்துவிட்டு பின்வாசல் வழியாக செல்ல என்ன காரணம்" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், எளிமையான முதல்வர் என்று கூறி கொள்ளும் விஜய் இப்படி வர வேண்டிய அவசியம் என்ன? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதற்கிடையே புத்தக வெளியீட்டு விழாவில் விஜய், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அருகில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அகிலேஷ் யாதவும் அவரது மனைவி டிம்பிள் யாதவும் சோனியா காந்திக்கு அருகில் அமர்ந்திருந்தனர்.


Click it and Unblock the Notifications
