தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.. உச்சநீதிமன்றம் போன தமிழக அரசு! முக்கிய பாயிண்ட்களை அடுக்க திட்டம்!
டெல்லி: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தவெக முறையீடு செய்திருக்கிறது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க தவெக ஊத்தங்கரை எம்எல்ஏ என்.இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரை விசாரித்த காவல்துறையினர் திருநாவுக்கரசு, சேதுராஜ், நரேஷ் உட்பட பலரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தை நாடியிருந்தனர். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் வழக்கை விசாரித்தார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கின் புலனாய்வுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மட்டுமல்லாது வழக்கில் தொடர்புடையவர்கள் ஹவாலா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்கான முழுமையான ஆதாரங்கள் இல்லை என்று கூறி சம்பந்தப்பட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தார்.
ஜாமீன் பெற்றவர்கள் மறு உத்தரவு வரும் வரை தினசரி காலை மற்றும் மாலை என இருவேளையும் சம்பந்தப்பட்ட திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். சாட்சியங்களை கலைக்கவோ அல்லது விசாரணைக்கு எவ்வித இடையூறு ஏற்படுத்தவோ கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதை தவெக ஏற்கவில்லை.
எனவே ஜாமீன் உத்தரவு, வழக்கின் தீவிரத்தன்மையை குறைத்துவிடும் என்றும் முறையான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் என்றும் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது தமிழக அரசு உறுதியான வாதங்களை முன்வைத்து ஜாமீனை ரத்து செய்ய கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
