இந்தியாவிலேயே அதிக விலைவாசி தமிழ்நாட்டில்தான்! மிடில் கிளாஸ் மக்களுக்கு காத்திருக்கும் 5 அதிர்ச்சி
டெல்லி: மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அக்டோபர் மாதப் பணவீக்கப் பட்டியலில், இந்தியாவிலேயே பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 7.29 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தேசிய சராசரியான 6.09 சதவீதத்தை விடத் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மிக அதிகமாக இருப்பது, சாதாரண மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் புரட்டிப் போடத் தொடங்கியுள்ளது. இந்த விலைவாசி உயர்வு தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை எளிமையாகப் பார்க்கலாம்.

ஆட்டம் காணும் பட்ஜெட்
தமிழ்நாட்டு வீடுகளில் அன்றாடச் சமையலுக்கு மிக முக்கியமான வெங்காயம் (116.22%), பூண்டு (60.74%), இஞ்சி (48.32%), எலுமிச்சை (47.30%) ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், ஒரு குடும்பத்தின் மாதாந்திர மளிகை மற்றும் காய்கறிச் செலவு மட்டும் கடந்த ஆண்டை விட 1,500 முதல் 3,000 ரூபாய் வரை கூடுதலாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் பால் மற்றும் சர்க்கரை விலையும் உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கிராமப்புற மக்களுக்குப் இரட்டை அடி
தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் பணவீக்கம் 6.84 சதவீதமாக உள்ள நிலையில், கிராமப்புறங்களில் அது 7.86 சதவீதமாக உச்சத்தைத் தொட்டுள்ளது. கிராமத்து மக்கள் தங்களது வருமானத்தில் பாதிக்கும் மேல் உணவுப் பொருட்களுக்கே செலவு செய்வதால், காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயக் குடும்பங்களை நேரடியாகப் பாதித்துள்ளது.
ஹோட்டல் உணவு மற்றும் பயணச் செலவுகள் அதிகரிப்பு
வீட்டில் சமைப்பது மட்டுமின்றி, வெளியே ஹோட்டல்களில் சாப்பிடும் செலவும் 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. பேச்சிலர்கள் மற்றும் அலுவலகம் செல்வோரின் உணவுச் செலவு கணிசமாகக் கூடியுள்ளது. அதேபோல, எரிபொருள் விலை மாற்றங்களால் போக்குவரத்துச் செலவுகளும் 5.84 சதவீதம் அதிகரித்திருப்பதால், வார இறுதிப் பயணங்கள் மற்றும் ஆட்டோ, கால்டாக்ஸி கட்டணங்களும் சுமையாக மாறியுள்ளன.
வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் இஎம்ஐ உயரும் அபாயம்
பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் 6% என்ற எல்லையைத் தாண்டியிருப்பதால், வரும் டிசம்பர் 2 முதல் 4 வரை நடைபெறும் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே கடந்த அக்டோபரில் வட்டி உயர்த்தப்பட்ட நிலையில், டிசம்பரிலும் 0.25% முதல் 0.50% வரை வட்டி உயர்ந்தால், 50 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மாதம் சுமார் 1,600 ரூபாய் வரை இஎம்ஐ தொகை அதிகரிக்கக்கூடும்.
சேமிப்பு கரைந்து, ஆடம்பரச் செலவுகள் குறையும்
சம்பளம் உயராத சூழலில், வீட்டு வாடகை, மளிகை, மருத்துவம் மற்றும் இஎம்ஐ ஆகியவற்றுக்கே வருமானத்தின் பெரும் பகுதி சென்றுவிடுவதால், நடுத்தர வர்க்கத்தினரின் மாதாந்திரச் சேமிப்பு கரையத் தொடங்கியுள்ளது. இதனால் தீபாவளி, பண்டிகை காலங்களுக்குப் பிறகு புதிய துணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது மற்றும் பொழுதுபோக்குச் செலவுகளைத் தமிழ்நாட்டு மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
