நாட்டிலேயே அதிக வளர்ச்சி.. டாப் 1 இடத்தை பிடித்த தமிழ்நாடு அசத்தல்! ரிசர்வ் வங்கி லிஸ்ட் விவரம்
டெல்லி: 2024-2025 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக வளர்ச்சி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. மதிப்பு அடிப்படையில் 16 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு அதிக வளர்ச்சியை பதிவுசெய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கான ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் பற்றிய கைடு ஒன்றை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் படி, மகாராஷ்டிராவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

வளர்ச்சியில் தமிழகம் முதலிடம்
மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக மகாராஷ்டிரா இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 31 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் 26 லட்சத்து 88 ஆயிரம் கோடியாக இருந்தது.
அதேவேளையில், 2024-25 ஆம் ஆண்டில் பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் மதிப்பு அடிப்படையிலான வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, 16 விழுக்காடு வளர்ச்சியை பெற்று நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதேபோல, பீகார், உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல் என முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
இது தான் திராவிட மாடல்
வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை!
* பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் #DravidianModel!
* கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி!
தமிழ்நாட்டுக்கே சொந்தம்
* 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி!
* நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் - தமிழ்நாட்டுக்கே சொந்தம்!
* தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி!
* 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி! இவ்வாறு ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications