தமிழ்நாட்டுக்கு பயங்கரமான வருவாய் இழப்பு ஏற்படும்.. ஜிஎஸ்டி கூட்டத்தில் பொங்கிய தங்கம் தென்னரசு!
டெல்லி: இன்று டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹாலுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால் தமிழ்நாடு அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாட்டின் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள், மத்திய மற்றும் மாநில நிதி மற்றும் வரி அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்றைய மீட்டிங்கில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் சிறு தானியங்களின் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் ஜிஎஸ்டி வரி அளவை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் சத்துக்கள் மிகுந்த சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சிறு தானியங்களால் செய்யப்படும் உணவுப்பொருட்களின் ஜிஎஸ்டி வரி 18% லிருந்து 5% ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுதானியங்களின் பலன் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையிலும், அதனை அனைவரும் சாப்பிட ஊக்குவிக்கும் வகையிலும் சிறு தானிய உணவுகளின் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் மதுபானங்கள் தயாரிப்பின்போது கிடைக்கும் எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹாலுக்கு (ENA) ஜிஎஸ்டியில் 28% ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தானிய அடிப்படையிலான மற்றும் வெல்லப்பாகு அடிப்படையிலான எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹாலுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால் மீதான GST வரி குறைப்பை எதிர்த்து வாதங்களை எடுத்துரைத்தார். ENA மீது இரண்டு விதமான வரி விதிப்பதில் உள்ள நிர்வாக நடைமுறை சிக்கல்கள் குறித்து கேள்வி எழுப்பினார் தங்கம் தென்னரசு.
மேலும், தமிழ்நாடு நிகர ENA இறக்குமதியாளராக இருப்பதால், தமிழ்நாடு அரசுக்கு இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அவர் கவலை தெரிவித்தார். மேலும், வெல்லப்பாகு (Molasses) மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தை கணிசமான அளவு குறைத்தால், மாநிலத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேசமயம், வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் சிறு தானிய (Millets) பொருட்களின் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் மீதான வரியை குறைக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் முன்மொழிவுக்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆதரவு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications