மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிடுங்கள்.. வேண்டிய மொழியை கற்றுக் கொள்ளுங்கள்.. தமிழிசை
டெல்லி: மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு தேவையான மொழியை கற்க வேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம் என மாநில அரசும், கூடுதலாக ஒரு மொழியை கற்பதில் எந்த தவறும் இல்லை என மத்திய அரசும் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள் வாரம் என்ற நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சிறப்பு விருந்தினர்கள்
இங்கு தினமும் ஒரு அமர்வில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று தமிழ் பாரம்பரியம், கலாச்சாரம், மொழியின் பெருமை தொடர்பாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த வரிசையில் இன்றைய தினம் காரைக்கால் அம்மையார் தினம் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் தெலுங்கானா ஆளுநரும் புதுவையின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு பேசினார்.

தமிழ் கலாச்சாரம்
அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில் தமிழ் கலாச்சாரம் குறித்து இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி. காசிக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் காசி தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நமது தமிழ் கலாச்சாரத்தின் இணைப்பை பார்த்து தெரிந்து கொண்டுள்ளனர்.

தமிழின் பெருமை
அதே போல் டெல்லியில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் மூலம் மற்ற மொழி பேசும் மாணவர்களும் தமிழ் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள முடியும். மாநிலத்திற்கு உள்ளேயே தமிழின் பெருமையை பேசுவதைவிட மற்ற மாநிலங்களுக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை எடுத்துச் செல்லும் போது மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழை கற்கும் ஆசை வரும்.

பிறமொழி
நாமும் பிறமொழிகளை கற்க வேண்டும். நம் தமிழ்மொழியை மற்றவர்களும் கற்க வேண்டும். இதுவே எனது கோரிக்கையாகும். உலக சாஸ்திரங்கள் எல்லாம் தமிழ் மொழியில் வேண்டும் என மகாகவி பாரதியார் கேட்டார். அது போல் நாம் மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு மொழியின் அவசியம் உணர்ந்து அவரவர்களுக்கு எந்த மொழிகள் தேவையோ அதை கற்க வேண்டும்.

சுதந்திரம்
ஒரு மொழியை கற்க அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும். மொழியை கற்றுக் கொள் என்று கூறுவதை மொழி திணிப்பு என தவறாக முன்னிறுத்துகிறார்கள். அது தவறு. நமது இனிய தமிழ் மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்றார். உதயநிதி அமைச்சரானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

புதுவையில் ஆளுநர் தமிழிசை பேச்சு
புதுவையில் ஈடன் கடற்கரை திறப்பு விழா மற்றும் புதுவை வணிக திருவிழா 2022-2023 ஆம் ஆண்டிற்கான சின்னம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் புதுவையில் பொம்மை ஆட்சி நடைபெறுகிறது என்றும் முதல்வர் பொம்மையாக இருக்கிறார் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அது உண்மைதான் ஆனால் பொம்மை ஆட்சி கர்நாடகாவில்தான். புதுச்சேரியில் இல்லை. அண்ணன் ஸ்டாலின் தவறாக சொல்லிவிட்டார். பொம்மை (பசவராஜ் பொம்மை) அவர்களின் ஆட்சி கர்நாடகாவில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications