ஒருமணி நேரம் வரை நீடித்த சந்திப்பு.. அதிமுக கூட்டணியை தொடர வேண்டாம்.. அமித் ஷாவிடம் சொன்ன அண்ணாமலை?
டெல்லி: டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த சந்திப்பில், அதிமுகவுடன் கூட்டணியை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் பாஜக நினைவு அளவிற்கு வளர முடியாது என்று அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக் காலமாக அதிமுக - பாஜக கூட்டணி இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததால், இரு கட்சி தலைவர்களிடையே காரசார கருத்து மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும்.

அண்ணாமலை பரபரப்பு
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வரும் மே மாதம் 10ஆம் தேதி வரை கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருப்பேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன் என்று தெரிவித்தார்.

டெல்லி சென்ற அண்ணாமலை
இதனால் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி குறித்த முடிவை டெல்லி தலைமை தான் எடுக்கும் என்று தெரிவித்தார். இதன்பின்னர் அண்ணாமலையும் அதே கருத்தை ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.

ஒரு மணி நேரம் ஆலோசனை
இந்தப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை சுமார் ஒரு மணி நேரம் வரை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித் ஷா சொன்னது என்ன?
இந்த ஆலோசனையில் தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும், அதிமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டாம் என்று அண்ணாமலை அமித் ஷாவிடம் எடுத்துரைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அதிமுக உடனான கூட்டணி தொடர்ந்தால், நினைத்த அளவிற்கு தமிழ்நாட்டில் பாஜகவால் வளர முடியாது என்றும் அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்வு குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமித் ஷா கூறியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications