மேகதாது அணை விவகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்கவே கூடாது: சுப்ரீம்கோர்ட்டில் தமிழகம்
டெல்லி: மேகதாது அணை விவகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்கவே கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டது காவிரி மேலாண்மை ஆணையம். காவிரி நதிநீர் திறப்பு தொடர்பான விவகாரங்களை கண்காணிப்பதுதான் இந்த மேலாண்மை ஆணையத்தின் பணி. ஆனால் புதிய அணை திட்டங்கள் குறித்தும் விவாதிக்க முனைப்பு காட்டுகிறது இந்த ஆணையம். இதனை தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கிறது.

மேலாண்மை ஆணைய கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் காவிரியின் குறுக்கே தாங்கள் கட்டும் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என ஆணையத்தின் தலைவர் ஹல்தரிடம் கர்நாடகா முறையிட்டது. ஆனால் தமிழக அரசு எதிர்த்தது.

உச்சநீதிமன்றத்தில் மனு
உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கக் கூடிய உத்தரவுகளுக்கு எதிரானது இந்த போக்கு என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது தமிழக அரசு. இவ்வழக்கில் தமிழக அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேலாண்மை ஆணையத்தின் பணி
உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை விவகாரம் நிலுவையில் உள்ள சூழலில் இதனை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை செய்ய முடியாது. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட இந்த மேலாண்மை ஆணையமானது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பானது மட்டும்தான். உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்கத்தான் இந்த ஆணையம். அதை தவிர்த்து புதிய அணை கட்டுமான திட்டங்களை பரிசீலனை செய்வது கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது
அத்துடன், உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கி இருக்கக் கூடிய தீர்ப்புகளை மீறுகிற வகையில்தான் கர்நாடகா மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த முனைகிறது. இதனைத் தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது. இந்த ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என மத்திய அர்சு கூறியதாக மேலாண்மை ஆணையம் சொல்வதை தமிழகம் ஏற்காது. காவிரி நதிநீர் பங்கீட்டுக்குள்ளாக வரக் கூடிய நீரை தடுக்க, திசை திருப்ப கர்நாடகாவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆகையால் மேகதாதுவில் 67.16 டிஎம்சி அணையை கர்நாடகா கட்டுவது சட்டவிரோதம் எனவும் தமிழக அரசு ஆணித்தரமாக கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications