வெடிக்கும் "ஜியோஹாட்ஸ்டார்" விவகாரம்.. இளைஞரை மிரட்டும் ரிலையன்ஸ்? என்ன நடக்கிறது! வெளியான தகவல்
டெல்லி: ஜியோஹாட்ஸ்டார் என்ற டொமைனை இளைஞர் ஒருவர் கடந்தாண்டு வாங்கிய நிலையில், அவர் தனது படிப்பிற்கு ரிலையன்ஸ் நிறுவனம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், இந்த கோரிக்கையை ரிலையன்ஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டதாகவும் மாறாகச் சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஜியோ நிறுவனம் மிரட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் டிவி பார்க்கும் வழக்கம், அதுவும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், இப்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. பலரும் ஓடிடி தளங்களுக்கு மாறி வருகிறார்கள்.

மாதத்திற்கு அல்லது ஆண்டிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டினால் போதும் மொபைல், லேப்டாப், ஸ்மார்ட் டிவி என எதில் வேண்டுமானாலும் விரும்பிய நேரத்தில் விரும்பிய நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். விளம்பர பிரச்சினையும் இல்லை என்பதால் பலரும் இப்போது ஓடிடி பக்கம் வருகிறார்கள்.
ஓடிடி தளம்: இந்தியாவைப் பொறுத்தவரை மிகப் பெரிய ஓடிடி என்றால் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் ஜியோசினிமா உடன் இணைக்கப்பட்டது. விரைவில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஹாட்ஸ்டாருக்கு மாற்றப்படும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிறுவனங்கள் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வந்தாலும் கூட, கடந்தாண்டு முதலே இரு நிறுவனங்களும் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. எப்படியும் இரு நிறுவனங்களும் இணையும் என்பதை எதிர்பார்த்த டெல்லியைச் சேர்ந்த ஆப் டெவலப்பர் ஒருவர் ஜியோஹாட்ஸ்டார் என்ற டொமைன் பெயரை வாங்கி இருக்கிறார்.
படிப்புக்கு உதவுங்கள்: அவர் இப்போது ஜியோஹாட்ஸ்டார் என்ற அந்த டொமைனை விற்கத் தயாராக இருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு செய்தியை அனுப்பி இருக்கிறார். எப்படி எனக் கேட்கிறீர்களா. ஜியோஹாட்ஸ்டார் என்ற இணையதளத்திற்குச் சென்றாலே அவர் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பிய அந்த தகவல் மட்டும் தான் இருக்கிறது. இந்த டெவலப்பர் யார் அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை.
ரிலையன்ஸ் நிறுவனத்திடம் அவர், "இந்த டொமைன் விற்பனைக்கு இருக்கிறது என்பதை நான் பார்த்தபோது, நான் நினைத்து எல்லாம் சரியாக நடக்கும் என்று உணர்ந்தேன். இந்த டொமைனை வாங்கும் எனது எண்ணம் எளிமையானது. இரு நிறுவனங்களும் இணைந்தால், இந்த டொமைனை வைத்து கேம்பிரிட்ஜில் படிக்கும் எனது கனவை என்னால் நிறைவேற்ற முடியும்" என்று பதிவிட்டு இருந்தார்.
மறுப்பு: அதாவது ஜியோஹாட்ஸ்டார் என்ற டொமைனை அவர் விற்கத் தயாராக இருக்கிறாராம். ஆனால், அதற்குப் பதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தான் படிக்க விரும்புவதாகவும் அதற்கான கட்டணத்தை ரிலையன்ஸ் ஏற்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாகும். இந்த பெயர் தெரியாத டெவலப்பரின் செயலுக்கு ஆதரவாகவே பலரும் இணையத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே இன்று அந்த தளத்தில் வேறு ஒரு அப்டேட்டை அந்த டெவலப்பர் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "ஜியோவில் இருந்து மூத்த அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டார். கேம்பிரிட்ஜில் படிக்க எனது கல்வி கட்டணமான £93,345 தேவை எனக் கோரிக்கை விடுத்தேன். இருப்பினும், எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ரிலையன்ஸ் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம்.
சட்ட நடவடிக்கை: நான் எனது அன்பான கோரிக்கையை அவர்கள் மறுபரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன். என்னைப் போன்ற ஒரு நபரின் படிப்புக்கு இவ்வளவு பெரிய நிறுவனம் உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு ஆதரவாகக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.
ரிலையன்ஸ் நிறுவனத்தை எதிர்த்து நிற்கும் சக்தி என்னிடம் இல்லை. 2023ல் நான் இந்த டொமைனை வாங்கியபோது நான் எந்த டிரேட்மார்க்கையும் மீறவில்லை. ஏனென்றால் அந்த நேரத்தில் JioHotstar டிரேட் மார்க் செய்யப்படவில்லை. சில மணி நேரத்தில் இந்த டொமைன் அணுகலை நான் தானாகவே இழக்க நேரிடும். இந்த நேரத்தில் எந்தவொரு சட்ட நிபுணரும் உதவினால், நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது ஜியோ நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக அந்த நபரை மிரட்டியதாக அழர் பதிவிட்டுள்ளார். அதேநேரம் ஜியோ அல்லது ஹாட்ஸ்டார் தரப்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.












Click it and Unblock the Notifications