மக்களுக்கு ஆறுதல்.. சமையல் எண்ணெய் விலையை உடனடியாக ரூ.15 வரை குறைக்க மத்திய அரசு உத்தரவு
டெல்லி: இந்தியாவில் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ. 15 வரை உடனடியாக குறைக்க வேண்டும் என்று சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வந்ததால், இந்தியாவில் எண்ணெய் விலை அதிகரித்து வந்தது. குறிப்பாக சில்லரை விற்பனையில் விலை உயர்வு எதிரொலித்தது. ஆனால் சமீபகாலமாக சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரம்
அதனால், இந்தியாவில் சூரியகாந்தி, சோயாபீன் மற்றும் பாமாயில் ஆகிய எண்ணெய்களின் சில்லறை விலை ஜூன் 1 முதல் லிட்டருக்கு 5-11 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சர்வதேச சந்தையில் தொடர்ந்து எண்ணெய் விலை குறைந்துள்ளதால், அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது.

மத்திய அரசு ஆலோசனை
இதனால் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக மத்திய உணவு செயலாளர் சுதன்சு பாண்டே, அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பெரும் உற்பத்தியாளர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் விலை குறைப்பது தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து சங்கங்களுடனும் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு எண்ணெய் வாங்கும் மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.15 வரை குறைப்பு
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய உணவு செயலாளர் சுதன்சு பாண்டே, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 10 சதவீதம் குறைந்திருப்பதால், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வலியுறுத்தினோம். இதனால் சமையல் எண்ணெய் விலையை ரூ.15 வரை குறைக்க அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல் பெரும் உற்பத்தியாளர்கள், அடுத்த வாரத்துக்குள் பாமாயில், சோயாபீன், சன்பிளவர் ஆயில் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எண்ணெய்களின் விலையை ரூ.15 குறைப்பதாக உறுதியளித்தனர் என்று தெரிவித்தார்.

மத்திய அரசு உத்தரவு
இந்த எண்ணெய்கள் விலை குறைந்தால், இதர சமையல் எண்ணெய்கள் விலையும் குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. ஒரே நிறுவனத்தின் சமையல் எண்ணெய் விலை, வெவ்வேறு மண்டலங்களில் ரூ.3 முதல் ரூ.5 வரை வேறுபாடாக இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரி விலையை நிர்ணயிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ. 15 வரை உடனடியாக குறைக்க வேண்டும் என்று சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications