2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் பாஜகவுக்கே வெற்றி.. மோடிதான் மீண்டும் பிரதமர்: இங்கிலாந்து நாளிதழ்!
டெல்லி: எதிர்வரும் 2024 லோக்சபா தேர்தலிலும், பாஜக பெரும்பான்மை இடங்களை வென்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான கார்டியன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானது. இந்த தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்கும் தலைவர் என்கிற பெருமையை மோடி பெறுவார். அதேபோல ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா 2025ம்ஆண்டு கொண்டாடப்பட இருக்கிறது. மட்டுமல்லாது இந்த தேர்தலில் பாஜக வென்றுவிட்டால் காங்கிரஸ் ஏறத்தாழ காலியாகிவிட்டது என்று அர்த்தமாகிவிடும். எனவே பாஜக இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள காத்திருக்கிறது.

இந்த நிலையில்தான் இங்கிலாந்தில் செயல்படும் பத்திரிகையான கார்டியன், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கணித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், “சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட்டை உறுதி செய்துள்ளன. இந்த 5 மாநிலங்களில் 3ல் பாஜகதான் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில் சட்டமன்ற தேர்தலுக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத, நரேந்திர மோடியை முன்னிறுத்தி பாஜக தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. அதாவது தேசிய அளவில் மோடியின் பிம்பத்தை கட்டமைக்க பாஜக முயற்சிக்கிறது.
2014க்கு பிறகு, நாட்டின் அரசு எந்திரம் பாஜக பக்கம் சாய்ந்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் விமர்சன ஊடகங்களுக்கு எதிராக அரசு அதிகாரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அரசியல் எதிரிகளை சிறையில் அடைப்பதற்கும் அரசின் விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பாஜகவுக்கு தேசிய அளவில் முழு ஆதரவு கிடையாது. தென்னிந்தியாவிலும், கிழக்கு மாநிலங்களிலும் செல்வாக்கு குறைவுதான். ஆனாலும் இந்த எதிர்ப்பு ஒற்றுமையில்லாமல் இருக்கிறது. மேலும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தற்போது மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது.
இதனை சரி செய்யதான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முக்கிய பிரச்னைகளுக்கு எதிராக ஒன்று சேரவில்லை. இந்த சூழலையெல்லாம் பொருத்தி பார்க்கும்போது பாஜக வெற்றி என்பது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அடுத்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு ஆயிரக்கணக்கான நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை ஒருங்கிணைப்பார்கள்.
யாத்திரை கடந்த 9 ஆண்டுகளில் பாஜக செய்த வெற்றி குறித்து பேசும். இது தவிர போர் நினைவுச் சின்னங்கள், பாதுகாப்பு அருங்காட்சியகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் மோடி கட்அவுட்டுடன் புகைப்படம் எடுக்கும் வகையில் 822 'செல்பி பாயிண்ட்களை' மத்திய அரசு அமைத்து வருகிறது. சந்திரயான் 3 வெற்றி போன்றவற்றை தனது அரசியல் மைலேஜிக்காக பாஜக பயன்படுத்திக்கொண்டது. மறுபுறம் ராஜஸ்தானில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நபரால் இந்து மதத்தை சேர்ந்தவர் ஒருவர் கொல்லப்பட்டதை, காங்கிரஸ் தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கிறது என்று கூறி வாக்கு வங்கியை உயர்த்தியது.
இதன் தொடர்ச்சியாக ராமர் கோயிலின் பிரமாண்ட திறப்பு விழாவையும் பாஜக தனது அரசியல் மைலேஜை அதிகரிக்க பயன்படுத்தி வருகிறது. சுருக்கமாக சொல்வதெனில் இந்துத்துவா கொள்கைகளை வைத்து வாக்கு வங்கியை உயர்த்தி வருகிறது. அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சமகால தெற்காசிய மையத்தின் இயக்குநர் அசுதோஷ் வர்ஷ்னி, 'இந்தியாவில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், தென் அமெரிக்க மாநிலங்களில் இருந்த ஜிம் க்ரோ சட்டங்களை போன்ற சட்டங்கள் உருவாக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. இந்த சட்டங்கள் ஒடுக்கப்பட்ட, ஒன்றும் இல்லாத மக்களை, பொருளாதாரத்தில் வசதியாக இருக்கும் உயர் சமூக மக்களுக்கு நேராக நிறுத்தி சமவாய்ப்புகளை வழங்கும். இதில் இயல்பாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த வாய்ப்பையும் பெற முடியாமல் மேலும் ஒடுக்கப்படுவார்கள்' என்ற விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
எப்படி இருந்தாலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது” என்று கார்டியன் இதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications