யூடர்ன் போட்ட கொரோனா? மறுபடியும் உச்சமடைந்த பாதிப்பு? 23 % பாதிப்பு அதிகம்! குழப்பத்தில் நிபுணர்கள்!
டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக கூடுவதும் குறைவதாகவும் இருக்கும் கொரோனா பாதிப்பு, நேற்று முன்தினம் 12 ஆயிரமாக இருந்து, நேற்று 10 ஆயிரமாக குறைந்த நிலையில் இன்று 23 % அதிகரித்து மீண்டும் 12 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பலத்த பொருளாதார இழப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது.
சுமார் மூன்று வருடங்களாக கொரோனாவின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மூன்றாவது அலை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து வரும் சூழலில் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 12000 என்ற அளவில் இருந்த நிலையில், நேற்று 10,000 ஆக பதிவானது. இந்நிலையில்தான் இன்று கூட பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

மீண்டும் உயர்வு
நேற்று முன்தினம் 12,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் நேற்று 10 ஆயிரத்துக்கு கீழே அதாவது, 9,923 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று 12 ஆயிரத்து 249 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 31 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை
கொரோனா காரணமாக 13 பேர் பலியான நிலையில் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 903 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 ஆயிரத்து 862 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 25 ஆயிரத்து 55 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி அளவு
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 81 ஆயிரத்து 687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 196 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 906 பேருக்கும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 லட்சத்து 28 ஆயிரத்து 291 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications