பலியான முதல் அக்னி வீரர்.. சியாச்சின் பனி மலையில் அதிர்ச்சி.. பென்ஷன் கூட இல்லை.. கொந்தளித்த ராகுல்
டெல்லி: சியாச்சின் பனி மலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த அக்னி வீரர் ஒருவர் நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு ராணுவ பயிற்சி பெற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த வீரர் காவேத் அக்ஷய் லட்சுமண் சியாச்சின் பனி மலையில் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திடீரென நேற்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டிருந்த தகவலில், "சியாச்சின் பனிமலைப் பகுதியில் நாட்டுக்காக பணியாற்றிய அக்னி வீரர் காவேத் அக்ஷய் லட்சுமணின் உன்னத தியாகத்துக்கு, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்களும் வீர வணக்கம் செலுத்துகிறோம்" என்று கூறியிருந்தது.

இந்நிலையில் அவரது சொந்த ஊருக்கு உடல் இன்று கொண்டுவரப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படுகிறது. இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி, ராகுல் காந்தி, உயிரிழந்த அக்னி வீரரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன் மத்திய அரசால் வழங்கப்படவில்லை என விமர்சித்துள்ளார். எல்லையில் பணியில் இருக்கும்போது ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை, மகள் திருமணத்திற்கான உதவி, மருத்துவ உதவி என 23 வகையான பலன்கள் கிடைக்கும்.

ஆனால் இதே ஒரு அக்னி வீரர் உயிரிழந்தால், காப்பீட்டு தொகை, பரிவுத்தொகை, மீதமுள்ள பணி காலத்திற்கான ஊதியம் (4 ஆண்டுகளுக்கு மட்டும்), சேவா நிதி தொகை என வெறும் 4 விதமான பலன்களை மட்டுமே அவரது குடும்பம் பெறும். குறிப்பாக உயிரிழந்த அக்னி வீரரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. இந்த விஷயங்கள்தான் அக்னி வீரர் திட்டம் கொண்டுவரப்பட்டபோது பெரும் சர்ச்சையாக வெடித்தது. உயரிய தியாகத்தை கோரும் ஒரு பணிக்கு ஓய்வூதியம் கூட இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசியல் கட்சிகள் விமர்சனம் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications
