கனவாகுமா கரும்பு சின்னம்.. சீமான் ஆசை நிறைவேறுமா.. தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சி பயன்படுத்தத் தடை கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்கிற நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படவில்லை. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த தேர்தல்களைப் போலவே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சீமான் தனது மனுவில் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி மன்மோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மேலும் பொது சின்னம் பட்டியலில் உள்ள அந்த சின்னத்தை முதலில் கோருபவருக்கே முன்னுரிமை அளித்து தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாகவும், அதன்படி, அந்த சின்னம் தற்போது வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கருத்து தெரிவித்தது.
இதனிடையே சீமானின் கரும்பு விவசாயி சின்னத்தை டிசம்பர் 17 ஆம் தேதி அன்று கர்நாடகாவைத் சேர்ந்த பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டதால், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை ஒதுக்கியது.
இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட்டதால், இந்த உத்தரவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இந்த வழக்கை வரும் 25ம் தேதிக்கு பிறகு மீண்டும் பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications