இந்தியாவில் மாஸ்க் பயன்படுத்துவது 74% குறைந்து விட்டது.. மத்திய சுகாதாரத்துறை ஷாக் தகவல்!
டெல்லி: கொரோனா தளர்வுகள் அளிக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவில் மாஸ்க் பயன்படுத்துவது 74 சதவீதம் குறைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வந்த கொரோனா தற்போது குறைந்து ஆறுதல் அளித்து வருகிறது. கொரோனா குறைந்து விட்டதால் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த தளர்வுகளை காரணமாக வைத்து மக்கள் மிகவும் மெத்தன போக்காக இருந்து வருகின்றனர். மாஸ்க் அணியாமல் இருப்பது, கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பது என அலட்சியமாக இருக்கின்றனர்.

மாஸ்க் பயன்படுத்துவது சரிவு
இந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவில் மாஸ்க் பயன்படுத்துவது 74 சதவீதம் குறைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. மக்கள் இயல்பான நடவடிக்கையை மீண்டும் தொடங்கும்போது மாஸ்க் பயன்பாட்டில் திட்டமிடப்பட்ட சரிவு
காணப்படுகிறது.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
மாஸ்க்குகளின் பயன்பாட்டை நமது வாழ்வின் ஒரு அங்கமாக நாம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். கூகுளின் குறியீட்டு தரவுகள் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் இந்தியாவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

மக்களுக்கு அறிவுரை
பல பகுதிகளில் சமூகத்தில் மக்களின் நடமாட்டம் கொரோனா முந்தைய காலத்திற்கு அருகில் சென்றுள்ளது என்பதை தரவு காட்டுகிறது என்றும் லாவ் அகர்வால் எச்சரித்துள்ளார். மக்களின் இந்த அதிகமான நடமாட்டம் இந்த பகுதிகளில் வைரஸ் தொற்று பரவுவதை அதிகமாக்கலாம். கொரோனா மேலும் பரவுவதை தடுக்க மாஸ்க் அணிவது, சமூக விலகல் மற்றும் கை சுத்தத்தை பராமரிப்பது போன்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் லாவ் அகர்வால் அறிவுரை வழங்கியுள்ளார்.

மோடி எச்சரிக்கை
கொரோனா தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு மலைப்பிரதேசங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடியும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் சந்தை பகுதிகளில், மக்கள் அதிமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளியை மறந்து, மாஸ்கை துறந்து மக்கள் கூட்டமாக கூடி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications