நிழல் பிரதமரான ராகுல் காந்தி.. எதிர்க்கட்சி தலைவருக்கு இருக்கும் 7 முக்கிய பொறுப்புகள் இதுதான்
டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக எதிர்க்கட்சி தலைவருக்கு என 7 முக்கியமான பொறுப்புகள் இருக்கின்றன. அந்த வகையில் ராகுல் காந்திக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது.
கடந்த இரண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறையும் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்பதற்கு பதில் காங்கிரஸ் கட்சியே இருக்கக்கூடாது என்று முழக்கங்களை வைத்து பாஜக இந்த தேர்தலை சந்தித்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உயர்ந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை அறிவித்திருக்கிறார். இந்நிலையில் எதிரக்கட்சித் தலைவர்களுக்கு இருக்கும் அதிகாரங்கள், பொறுப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக எதிர்க்கட்சி தலைவர் என்கிற பதவி கேபினெட் அமைச்சருக்கு இணையானதாகவும், நிழல் பிரதமர் பதவி போன்றதாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவருக்கு என 7 முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. அதில் முதன்மையானது அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் உரிமை. பிரதமர் ஆட்சி செய்கிறார் எனில் அதை விமர்சிக்கும் உரிமை எதிர்க்கட்சி தலைவருக்கு இருக்கின்றது. எதிர்க்கட்சி தலைவர்களின் முழக்கங்களை முடக்கவோ, தடுக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது.
அதேபோல எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது, நிழல் அமைச்சரவையை கொண்ட நிழல் பிரதமர் பதவியாகும். ஆளும் கட்சி கவிழ்ந்தாலோ, பிரதமர் ராஜினாமா செய்தாலோ உடனடியாக அதிகாரத்தை ஏற்று ஆட்சியமைக்க எதிர்க்கட்சி தலைவர் தயாராக இருக்க வேண்டும். எனவே எதிர்க்கட்சி தலைவர் என்பவர் பொறுப்பு மிக்க நபராக இருத்தல் வேண்டும்.
அதேபோல நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றக்கூடிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சி தலைவருக்கு இருக்கிறது. இது தவிர அரசின் கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவரிடம் பிரதமர் ஆலோசனை மேற்கொள்ளலாம். வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்புக் கொள்கை போன்ற விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் பிரதமர், எதிரக்கட்சி தலைவரிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம்.
அதேபோல எதிர்க்கட்சி தலைவர் வெளிநாட்டில் இருக்கும்போது கட்சி அரசியலை தவிர்க்க வேண்டும் என்று ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நாடாளுமன்றத்திலும், உள்நாட்டிலும் எதிர்க்கட்சி தலைவர் தாராளமாக அரசியலை செய்யலாம்.
இது தவிர எதிர்க்கட்சி தலைவருக்கு என மற்றொரு முக்கிய பொறுப்பும் இருக்கிறது. அவர், சிறுபான்மையினரின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளராக அடையாளம் காணப்படுகிறார். சிறுபான்மையினரின் உரிமைகள் மீறப்படும்போதும், அவர்களுக்கான நீதி மறுக்கப்படும்போதும் எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு எதிராக நின்று செயல்பட வேண்டும்.
இது தவிர மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர், தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் போன்ற அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்புக் குழுக்களில் ஒருவராக எதிர்க்கட்சி தலைவர் இருப்பார். இப்படியாக எதிர்க்கட்சி தலைவருக்கு என பல முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications