“தலித் மீதான தாக்குதலை நிறுத்துக!” சசிகாந்த் செந்தில் கூறிய உடனே.. பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு
டெல்லி: திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்றார். மேலும், தலித்- ஆதிவாசிகள்-சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக என்றும் அவர் முழக்கமிட்டார். அப்போது அதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்தது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார்.

இதையடுத்து நாடாளுமன்றம் முதல்முறையாக நேற்றைய தினம் கூடியது. நேற்றும் இன்றும் லோக்சபாவில் பல கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்றனர். இரண்டாவது நாளான இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்றனர்.
பதவியேற்ற தமிழ்நாடு எம்பிக்கள்: திமுக: தமிழகத்தின் 39 எம்பிக்களும் லோக்சபாவில் இன்று பதவியேற்க உள்ளனர். தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். அவர்கள் அனைவரும் இன்று பதவியேற்றனர். அதேபோல புதுச்சேரியில் காங்கிரஸ் வென்ற நிலையில், புதுச்சேரி வி. வைத்தியலிங்கமும் இன்று பதவியேற்றார்.
லோக்சபா தேர்தலில் வென்று எம்பியாக தேர்வானவர்கள் பொதுவாக ஆங்கிலம் அல்லது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் உறுதிமொழி எடுக்கலாம். மேலும், பொதுவாகவே இதுபோல உறுதி மொழி எடுக்கும் போது எம்பிக்கள் கோஷங்களை எழுப்புவது வழக்கம். அதேபோல இன்றும் பல எம்பிக்களும் கோஷங்களை எழுப்பிப் பதவியேற்றனர். மேலும், பலரும் அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்றனர்.
சசிகாந்த் செந்தில்: அதன்படி திருவள்ளூர் தொகுதி எம்பி சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்றார். அவர் அரசியல் சாசனப் புத்தகத்துடன் பதவியேற்க வந்த போதே ஆளும் பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து தமிழில் உறுதிமொழி ஏற்றுப் பதவியேற்ற அவர், "வாழிய வையகம்-! வாழ்க தமிழ்! தலித்- ஆதிவாசிகள்-சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக" என முழக்கமிட்டுப் பதவியேற்றார். அவர் இதுபோல சொன்னதும் பாஜக தரப்பினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களையும் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
பதவிப் பிரமாண வாசகங்களைத் தவிர எம்பிக்கள் எழுப்பும் முழக்கங்கள் சபைக் குறிப்பில் இடம் பெறாது எனத் தற்காலிக சபாநாயகர் அறிவித்து இருந்தார். இருப்பினும், தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்களும் பதவியேற்கும் போது தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் செந்தில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக பாஜகவில் இருந்து பொன்.வி பாலகணபதி, தேமுதிகவில் இருந்து நல்ல தம்பி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். அதில் சசிகாந்த் செந்தில் சுமார் 7.96 லட்சம் வாக்குகளைப் பெற்று 5.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாஜக வேட்பாளர் பாலகணபதி 2.24 லட்சம் வாக்குகளைப் பெற்று 2ம் இடத்திற்கு வந்தார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட நல்லதம்பி 2.23 லட்சம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications