பேருதான் 'இடைக்கால' பட்ஜெட்.. ஆனா இதுல இவ்வளவு விஷயம் இருக்கா! வேறுபாடுகள் இதுதான்
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆனால் இது இடைக்கால பட்ஜெட்டாகும். முழு பட்ஜெட்டிற்கும் இடைக்கால பட்ஜெட்டிற்கு இடைய வேறுபாடுகள் இருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெபளதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து இன்று நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்கு முன்னர் ஏற்கெனவே அவர் 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில், 6வது முறையாக இன்றும் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இருக்காது. ஆனால் லோக்சபா தேர்தல் நெருங்குவதால் இதில் சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

இடைக்கால பட்ஜெட் என்பது தேர்தல் காலங்களில் தாக்கல் செய்யப்படும். தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் விரிவான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தல் முடியும் வரை அரசின் வரவு செலவு கணக்குகளுக்காக இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும் இதனை தயாரிக்கும் பணிகள் சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிடுகின்றன.
குறிப்பாக அமைச்சகங்கள் அமல்படுத்த இருக்கும் திட்டங்களின் விவரங்கள், அதற்கு ஆகும் செலவுகள் குறித்த விரிவான தகவல்கள் கேட்டு பெறப்படும். இந்த தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒட்டுமொத்த நிதி தேவை எவ்வளவு என்பது குறித்து அளவிடப்படும். அதேபோல திட்டக் கமிஷனுடன் விவாதிக்கப்பட்டு அந்தந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதில் நிதி பற்றாக்குறையும் ஏற்படும். இதனை ஈடு செய்ய பெறப்பட உள்ள கடன் குறித்த விவரங்களையும் நிதியமைச்சர் பட்ஜெட்டில் குறிப்பிடுவார்.
மிகச்சரியாக சொல்வதெனில் இடைக்கால பட்ஜெட் என்பது ஒரு தற்காலிக பட்ஜெட்தான். புதிய அரசாங்கம் வந்து புதிய முழு வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்கும் வரை குறுகிய காலத்திற்கு அரசாங்கத்தின் செலவினங்களைச் சந்திப்பதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடாக இந்த பட்ஜெட் இருக்கிறது.
முழு பட்ஜெட்டில் முழு நிதியாண்டுக்கான அரசாங்க செலவுகள், வருவாய் உருவாக்கம், கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான நிதித் திட்டமாக இருக்கும். ஆனால் இடைக்கால பட்ஜெட்ல் அத்தியாவசிய அரசாங்க செயல்பாடுகள், தற்போதைய திட்டங்கள் மற்றும் அவசர தேவைகளுக்கு நிதி ஒதுக்கப்படும். அதேபோல கொள்கை சீர்திருத்தம் விஷயத்திலிருந்து இடைக்கால பட்ஜெட் விலகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications