‛‛கைது செய்வதாக மிரட்டுகிறார்’’.. ஸ்மிருதி இரானி மீது லோக்சபாவில் திமுக எம்பி ஆ ராசா பரபர புகார்
டெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கைது செய்வதாக மிரட்டல் விடுகிறார். உச்சநீதிமன்றம் என்ன பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது திமுக எம்பி ஆ ராசா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 2வது நாளாக விவாதம் நடந்து வருகிறது. இன்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பேசினார். இந்த வேளையில், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு, பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மணிப்பூர் மூலம் பாரத மாதாவை கொலை செய்துவீட்டிர்கள். நீங்கள் தேசபக்தர்கள் இல்லை. நீங்கள் தேசத்துரோகிகள். மணிப்பூர் மாநிலத்தை இரண்டாக துண்டாக்கவீட்டிர்கள் என கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசினார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். அப்போது அவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார். ஊழல்வாதிகள், ஊழலை கண்டுபிடித்தவர்கள் என சாடினா்ர. மேலும் அவர் தமிழ்நாட்டை இழுத்து பேசினார். இதனால் தமிழகத்தை சேர்ந்த திமுக எம்பிக்கள் கடும் கோபமடைந்தனர்.
இதுதொடர்பாக ஸ்மிருதி இரானி பேசுகையில், நீங்கள்(எதிர்க்கட்சிகள்) மணிப்பூரை பற்றி பேசும் முன் தமிழ்நாட்டை பற்றி பேசுங்கள். பாஜக பற்றி பேசும் முன் உங்கள் கூட்டணி திமுக பற்றி பேசுங்கள். ஊழலை பற்றி பேசும்போது, உங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள். நீங்கள் இந்தியாவிற்கு ஊழலை அறிமுகம் செய்த கட்சி. அதேபோல் தமிழ்நாட்டில் திமுக உள்ளது எனும் வகையில் விமர்சனம் செய்தார்
இதன் தொடர்ச்சியாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் திமுகவை சேர்ந்த நீலகிரி மாவட்ட எம்பி ஆ ராசா பேசினார். அப்போது ஸ்மிருதி இரானி தன்னை கைது செய்வதாக மிரட்டுவதாக பரபரப்பான புகாரை அவர் முன்வைத்தார். அதோடு நீதிமன்றம் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக ஆ ராசா கூறுகையில், ‛‛உச்சநீதிமன்றம் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா? நாட்டின் நீதிமன்றங்களை அச்சுறுத்தி கட்டுப்படுத்தி வைத்துள்ளதா பாஜக?. கைது செய்யப்படுவீர் என ஸ்மிருதி இரானி எனக்கு மிரட்டல் விடுக்கிறார்'' என தெரிவித்தார். இதனால் லோக்சபாவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து திமுக எம்பி கனிமொழியும் மத்திய அரசையும், மணிப்பூர் மாநில பாஜக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications