வாரணாசியில் பிரதமர் மோடி கார் மீது செருப்பு வீச்சு.. "வெறுப்புக்கு இடமில்லை" ராகுல் கடும் கண்டனம்
டெல்லி: வாரணாசியில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்ற பிரதமர் மோடியின் வாகனம் மீது காலணி வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரிய பாதுகாப்பு விதி மீறலாக பார்க்கப்பட்ட நிலையில், இது கடும் கண்டனத்துக்கு உரியது என்றும், அரசின் கொள்கைகளுக்கு எதிரான கண்டனத்தை காந்திய வழியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று 3 வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு பிரதமர் மோடி, முதல் முறையாக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நேற்று முன்தினம் சென்றார். 'பிஎம் கிசான் சமேளன்' திட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் 17 வது தவணையாக ரூ.20,000 கோடி ரூபாயை விடுவித்தார். மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து காரில் சென்ற பிரதமர் மோடியை காண சாலையின் இருபக்கமும் மக்கள் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து மோடி கைகளை அசைத்தபடி சென்றார். மோடியின் காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அப்போது கூட்டத்தில் இருந்து மோடியின் கார் மீது செருப்பு ஒன்று வீசப்பட்டது.
கூட்டத்தில் இருந்து பறந்து வந்த செருப்பு பிரதமர் மோடி பயணித்த காரின் முன்புறத்தில் விழுந்தது. இதையடுத்து பாதுகாவலர் அந்த செருப்பை காரில் இருந்து எடுத்து அப்புறப்படுத்தினார். உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட மோடியின் கார் கன்வாய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பாதுகாப்பு விதிமீறலாகவும் பார்க்கப்பட்டது. மோடியின் கார் மீது வீசப்பட்டது செருப்புதானா? அல்லது வேறு எதேனும் ஒரு பொருள் வீசப்பட்டதா என்ற விவாதமும் கிளம்பியுள்ளது.
எப்படி இருந்தாலும் பெரிய பாதுகாப்பு விதி மீறலாகவே இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று ரேபரலி தொகுதி எம்பியும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி இந்த சம்பவத்திற்கு கடும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடியின் கார் கன்வாய் மீது காலணி வீசுவது கடும் கண்டனத்திற்குரியது. தீவிர பாதுகாப்பு குறைபாடும் ஆகும். அரசுக்கு எதிரான நமது எதிர்ப்புகள் காந்திய வழியில் தான் இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் வெறுப்புக்கும் இடம் இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications