75வது குடியரசு தின கொண்டாட்டம்! டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
டெல்லி: நாட்டின் 75வது குடியரசு தின கொண்டாட்டம் இன்று டெல்லியின் கடமை பாதையில் முப்படைகளின் அணிவகுப்புடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து மூவர்ண கொடியை ஏற்றினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிடோர் பங்கேற்றனர். பொதுவாக குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம்.

அந்தவகையில், இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்க, அமெரிக்கா அதிபர் ஜோ பிடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் அழப்பை ஏற்று இன்று விழாவில் பங்கேற்றார். இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் மேக்ரோன் பங்கேற்றதன் மூலம், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பிரான்சைச் சேர்ந்த 6வது அதிபர் என்ற சிறப்பை அவர் பெற்றிருக்கிறார்.
இந்த குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் ராணுவக்குழுவும் பங்கேற்றிருக்கிறது. டெல்லி குடியரசு தின விழாவில் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இடம் பெற்றுள்ளன. கடமை பாதையில் இந்த அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன. தமிழ்நாடு சார்பில் குடவோலை முறையை விளக்கும் அலங்கார ஊர்தி அணிவகுத்து சென்றது. இந்த அணிவகுப்பில் சில மாநிலங்கள் விடுபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கவில்லை.
இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் நாட்டின் பெண்களின் சக்தி மற்றும் ஜன நாயக கோட்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டன. சுமார் 90 நிமிடங்கள் நடை பெற்ற குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக முப்படைகளில் உள்ள பெண் படைப் பிரிவினர் பங்கேற்றனர். ராணுவத் தளவாடப் பிரிவில் முதல்முறையாக பணியமர்த்தப்பட்ட 10 பெண் அதிகாரிகளில் தீப்தி ராணா, பிரியங்கா செவ்டா ஆகியோர் பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் குண்டுகளைக் கண்டறியும் ரேடார் அமைப்புடன் பங்கேற்றனர்.
வழக்கமாக இடம்பெறும் ராணுவப் பிரிவு பேண்ட் வாத்தியங்களுக்குப் பதிலாக 100-க்கும் மேற்பட்ட பெண் இசைக் கலைஞர்கள் நாதஸ்வரம், நகாடா போன்ற இந்திய இசை வாத்தியங்களை இசைத்தனர். இந்திய விமானப் படையைச் சேர்ந்த 15 பெண் விமானிகள் விமான சாகசங்களை நிகழ்த்தினர். முன்னதாக அணிவகுப்பு நடைபெறும் இடத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாரட் வண்டியில் வந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்று சாரட் வண்டிகளை குடியரசுத் தலைவர்கள் பயன்படுத்தினர். ஆனால் அதன் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுதான் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications