டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு.. ஜி20 மாநாடு சிறப்பு விருந்தில் பங்கேற்பு!
டெல்லி: ஜி20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் அளிக்கும் இரவு விருந்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றடைந்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் இன்று ஜி20 உச்சி மாநாடு துவங்குகிறது. உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு வருவதால் தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் இன்றும் நாளையும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உட்பட உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தலைநகர் டெல்லியில் குவிந்து வருகின்றனர்.
ஜி20 மாநாட்டிற்காக டெல்லி வந்தடைந்த தலைவர்களுக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று செப்டம்பர் 9ஆம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்களும், மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த விருந்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த விருந்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு மீண்டும் சென்னை வந்தடைகிறார்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு இந்த இரவு விருந்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவை விருந்துக்கு அழைக்காதது, நாட்டின் பெரும்பான்மை மக்களை மதிக்காததற்கு சமம் எனக் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்த நிலையில் அவருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications