கிட்னி முறைகேடு: SIT குழுவை மாற்ற முடியாது.. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: நாமக்கல் கிட்னி முறைகேடு வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. SIT அமைத்த நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறிய சுப்ரீம் கோர்ட், அதே நேரம் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் கூறிய கருத்துகளை மட்டும் நீக்கி, தமிழ்நாடு அரசின் வழக்கை முடித்து வைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஏழ்மையில் வாடிய விசைத்தறி தொழிலாளர்களின் கிட்னி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதில் திருச்சியில் உள்ள மருத்துவமனை திமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் சக்தீஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்ய பொது நல மனுவில், நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கிட்னி முறைகேடு விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன், கார்த்திகேயன் மற்றும் மதுரை எஸ்பி அரவிந்த் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்த நீதிமன்றம், நாமக்கல் கிட்னி விற்பனை குறித்து வழக்குப்பதிந்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், நாமக்கல் கிட்னி முறைகேடு வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை. நாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளின் பெயர்களில் இருந்து தேர்வு செய்து குழுவை அமைக்க வேண்டும். அதிகாரிகளை தொலைதூரத்தில் இருந்து தேர்ந்தெடுப்பதால் நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
கிட்னி முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழுவை எதிர்க்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. நீதிமன்றம் நியமித்த அதிகாாிகள் 200, 140 கிலோ மீட்டா் தூரத்தில் இருந்து வருவதால் நிா்வாக ரீதியில் சிக்கல் எழுகிறது. கிட்னி முறைகேடு தொடா்பாக விசாாிக்க நாங்கள் பாிந்துரைக்கும் அதிகாாிகளை வைத்து நீதிமன்றம் குழு அமைக்கட்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு நீதிபதிகள், "சிறப்பு விசாரணைக் குழு அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை. கிட்னி முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழுவை மாற்ற முடியாது" எனத் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு காவல்துறைக்கு எதிராக சென்னை ஐகோர்ட் கூறிய கருத்துகளை நீக்க ஆணையிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.












Click it and Unblock the Notifications