நாடு முழுக்க சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலானது.. தமிழகத்தில் 36 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு!
டெல்லி: நாடு முழுக்க இருக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது.
நமது நாட்டில் இருக்கும் சாலை கட்டமைப்பில் நெடுஞ்சாலைகள் மிக முக்கியமானது.. முக்கிய நகரங்கள் அல்லது மாநிலங்களுக்கு இடையே விரைவாகப் பயணிக்கவும் சரக்குகளை எளிமையாக எடுத்துச் செல்லவும் நெடுஞ்சாலைகள் முக்கியமானது.

விரிவான நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு இருப்பதாலேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகவும் வேகமாகவும் செல்ல முடிகிறது. இதனால் பயண நேரம், எரிபொருள் என அனைத்தும் வெகுவாக சேமிக்கப்படுகிறது.
சுங்கக் கட்டணம்: அதேநேரம் நாம் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது தனியாகச் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். நாடு முழுக்க உள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணங்கள் ஆண்டுதோறும் இரண்டு முறை அதாவது ஏப்ரல் மற்றும் செப். மாதங்களில் உயர்த்தப்படும்.
அதேபோல இந்தாண்டும் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் அந்த சுங்கக் கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது.. மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல் காரணமாகச் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
உயர்வு: இந்தச் சூழலில் லோக்சபா தேர்தல் இப்போது முடிந்துவிட்ட நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தது. அதில் இன்று முதல் முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இரவு 12 மணிக்கு புதிய கட்டணம் அமலுக்கு வந்தது.
நாடு முழுக்க ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.. இரவு 12 மணிக்கு புதிய சுங்கக் கட்டணம் தொடர்பான விவரங்களை ஊழியர்கள் சுங்கச்சாவடிகளில் வைத்தனர். ஏற்கனவே இந்த சுங்கக் கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 36 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. மணகெதி, கல்லக்குடி, வல்லம், தென்னமாதேவி உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. ஒரு முறை பயணிக்கும் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல மாதாந்திர பாஸ் கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications