பெட்ரோல் தேவையே இல்லை.. லிட்டர் 25 ரூபாய் செலவில் ஓடும் கார்! வருகிறது டொயோட்டா இன்னோவா
டெல்லி: பெட்ரோல் தேவையில்லாமல் முழுமையாக எத்தனால் மூலம் இயங்கும் டொயோட்டா இன்னோவா கார் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த காரை இயக்க லிட்டருக்கு ரூ.25 என்ற அளவில் தான் எரிபொருள் நிரப்ப வேண்டி இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே எத்தனால் கலப்பு குறித்து விவாதம் தொடர்ந்து வருகிறது. நாடு முழுக்க உள்ள பெட்ரோல் நிலையங்களில் இப்போது 20% எத்தனால் கலப்பு பெட்ரோல் தான் கிடைக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும், எத்தனால் கலப்பில் இருந்து மத்திய அரசு பின்வாங்குவது போல இல்லை. தொடர்ந்து எத்தனால் கலப்பை ஊக்குவித்தே வருகிறது.

100% எத்தனால் கார்
ஏற்கனவே E85 பெட்ரோலும், அதற்கான வாகனங்களும் இந்திய மார்கெட்டிற்கு வந்துவிட்டது. இதற்கிடையே அடுத்த கட்டமாக பெட்ரோலே இல்லாமல் முழுமையாக எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்களும் சந்தைக்கு வரவுள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
100 சதவீத எத்தனால் மூலம் இயங்கும் டொயோட்டா இன்னோவா காரின் அறிமுக நிகழ்ச்சிக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த வாகனத்திற்கு பெட்ரோல் தேவையில்லை என்றும் முழுமையாக எத்தனாலை எரிபொருளாக கொண்டு இயங்கும் என்றும் அவர் கூறினார். மேலும், இந்த காரை இயக்குவதற்கான செலவு லிட்டருக்கு ரூ.25 மட்டுமே ஆகும் எனவும் கட்கரி தெரிவித்துள்ளார்.
நிதின் கட்கரி
ஏற்கனவே உலகின் 19 நாடுகளில் எத்தனால் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்தியாவில் எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த காரை எத்தனால் மூலம் இயக்குவது மட்டுமல்லாமல், அது இயங்கும்போதே 60 சதவீத மின்சாரத்தை உருவாக்கும் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பெட்ரோலுக்கு மாற்றான எரிபொருளை பயன்படுத்தும் வாகனமாக மட்டுமின்றி, மின்சார உற்பத்தியையும் வாகனமாக இந்த இன்னோவா உருவாக்கப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார். எனினும் காரின் மைலேஜ், எத்தனால் பயன்பாட்டின் அளவு, மின்சார உற்பத்தி எந்த முறையில் கணக்கிடப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை அவர் பகிரவில்லை. வரும் நாட்களில் தான் இது வெளியாகும் என தெரிகிறது.
மத்திய அரசு
இந்த அறிவிப்பு இந்தியாவில் எத்தனால் பயன்பாடு குறித்த விவாதம் தொடரும் நிலையில் வெளியாகியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள E20 திட்டத்தின் கீழ், பெட்ரோலில் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுகிறது. எத்தனால் கலப்பை அதிகரிப்பதால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகவும், இன்ஜின் செயல்திறன் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளன. சிலர் நீண்ட கால பராமரிப்பு செலவு அதிகரிக்கும் எனவும் அஞ்சுகிறார்கள்.
ஆனால், E20 எரிபொருளால் மைலேஜ், இன்ஜின் ஆரோக்கியம் அல்லது பராமரிப்பு செலவில் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் இது தொடர்பாக வாகன உற்பத்தியாளர்கள், ஆட்டோமொபைல் அமைப்புகளிடம் இருந்து தங்களுக்கு எந்தவொரு புகாரும் வரவில்லை என்பதையே மத்திய அரசு சொல்கிறது.
டொயோட்டாவின் புதிய முயற்சி
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிக அளவு எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், டொயோட்டாவின் புதிய முயற்சி வெளியாகிறது. முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி நாட்டின் முதல் ஃப்ளெக்ஸ்-ஃபியூல் காராக அறிமுகம் செய்தது.
வழக்கமான பெட்ரோல் கார்களை போல இல்லாமல், இந்த ஃப்ளெக்ஸ்-ஃபியூல் வாகனங்கள் E20 முதல் 85 சதவீத எத்தனால் வரையில் அனைத்து வகையான எரிபொருளிலும் இயங்கும் திறன் கொண்டவை. ஆனால், டொயோட்டா அதை விட ஒரு படி மேலே சென்று பெட்ரோலுக்குப் பதிலாக 100 சதவீத எத்தனாலை பயன்படுத்தும் புதிய இன்னோவா காரை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
