இனி இந்த தவறு செய்தால் லைசென்ஸ் ரத்து! மத்திய அரசு கொண்டு வரும் புதிய 'பாயிண்ட்' சிஸ்டம்!
டெல்லி: வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இனி சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறினால் வெறும் அபராதம் கட்டிவிட்டு தப்பித்துவிட முடியாது. தொடர்ந்து விதிகளை மீறும் நபர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்தாகும் அளவுக்கு புதிய நடைமுறை ஒன்றை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 66-வது ஆண்டு கூட்டத்தில் பேசிய அவர், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எடுத்து வரும் புதிய நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

புதிய 'பாயிண்ட் சிஸ்டம்' என்றால் என்ன?
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, "டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் (RC) ஆகியவற்றில் 'கிரேடட் பாயிண்ட் சிஸ்டம்' என்ற புதிய முறையைக் கொண்டுவர எங்கள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த முறை வெளிநாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒரு நடைமுறையாகும். இதன் கீழ் ஒவ்வொரு முறை நீங்கள் போக்குவரத்து விதியை மீறும்போதும், உங்கள் லைசென்சில் இருந்து குறிப்பிட்ட புள்ளிகள் குறைக்கப்படும்.
உதாரணமாக, அதிவேகமாக வண்டி ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது, ஆபத்தான முறையில் முந்திச் செல்வது போன்ற தவறுகளை நீங்கள் செய்யும்போது, அந்த தவறுக்கு ஏற்ப புள்ளிகள் கழிக்கப்படும். இப்படி தொடர்ந்து தப்பு செய்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் புள்ளிகள் குறைந்துவிட்டால், உங்கள் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக முடக்கப்படும் அல்லது மொத்தமாக ரத்து செய்யப்படும்.
ஒரே ஒரு அபராதத்தோடு விஷயம் முடியாது!
இப்போதுள்ள நடைமுறையில், சிக்னலை தாண்டினாலோ அல்லது வேகமாக சென்றாலோ அபராதம் செலுத்திவிட்டால் அந்த வழக்கு முடிந்துவிடுகிறது. ஆனால் புதிய முறையில், நீங்கள் செய்யும் ஒவ்வொரு தப்பும் உங்கள் லைசென்சில் ஒரு பதிவாக சேமிக்கப்படும். மீண்டும் மீண்டும் அதே தவறை செய்பவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த முறை வழிவகுக்கும்.
"இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்க டிரைவர்களின் நடத்தை மிக முக்கியமானது. பலர் தொடர்ந்து தவறுகளை செய்துகொண்டே இருக்கிறார்கள். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. விதியை மீறுபவர்கள் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என்று நிதின் கட்கரி உறுதியாகக் கூறினார்.
நல்லா வண்டி ஓட்டுபவர்களுக்கு ஸ்பெஷல் பரிசு!
இந்த புதிய சட்டம் விதிகளை மீறுபவர்களை தண்டிப்பதற்கு மட்டுமே அல்ல; ஒழுங்காக வண்டி ஓட்டுபவர்களை பாராட்டி ஊக்குவிக்கவும் பயன்படும்.
யாரெல்லாம் எந்த போக்குவரத்து விதியையும் மீறாமல், சுத்தமான ரெக்கார்டு வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பு சலுகைகள் அல்லது தள்ளுபடிகள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. பொறுப்பாக வாகனம் ஓட்டும் நல்ல டிரைவர்களுக்கு இது ஒரு சிறந்த ஊக்கமாக இருக்கும்.
இதனுடன் சேர்த்து, வாகனங்களின் பாதுகாப்புத் தரத்தை சோதிக்கும் 'பாரத் என்கேப் 2.0' திட்டம் 2027 அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சொந்த பைக் வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி: பைக் டாக்ஸிக்கு அனுமதி!
இதே கூட்டத்தில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தியையும் அமைச்சர் நிதின் கட்கரி பகிர்ந்துகொண்டார். பொதுமக்கள் தங்களின் சொந்த இருசக்கர வாகனங்களை வைத்து பைக் டாக்ஸி ஓட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். மாநில அரசுகள் இதனைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள சூழலில், சொந்தமாக பைக் வைத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல கூடுதல் வருமானத்தைத் தரும். நாடு முழுவதும் சுமார் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் இந்த திட்டத்திற்கு உண்டு என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எனவே, இனி ரோட்டில் வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் போடுவது, சிக்னல் மதிப்பதைத் தவறாமல் பின்பற்றுங்கள்; இல்லையென்றால் உங்கள் லைசென்ஸ் பறிபோக வாய்ப்புள்ளது!


Click it and Unblock the Notifications
