கார்களில் வரப்போகும் முக்கிய மாற்றம்! மத்திய அரசு பக்கா பிளான்.. கார் வச்சிருக்கவங்க தெரிஞ்சுக்கனும்
டெல்லி: இந்தியாவில் பயணிகளின் பாதுகாப்பு கருதி பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களை சாலை போக்குவரத்து அமைச்சகம் கட்டாயம் ஆக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது பின் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு கருதி புதிய முடிவு ஒன்றை மத்திய அரசு அறிவிக்க உள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக விபத்துக்களின் போது கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பதால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பதால் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது.

அது மட்டும் இன்றி பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றும் அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தற்போது அனைத்து கார்களிலும் பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களும் சீட் பெல்ட் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் இந்த சீட் பெல்ட் அணியாமலே பயணிப்பதாக சொல்லப்படுகிறது.
சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிக்கும்: குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு விபத்தில் பலியான டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் இயக்குனர் சைரஸ் மிஸ்திரி கூட சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததே விபத்தில் உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. பின் இருக்கையில் இருக்கும் பயணிகள் பலரும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளாமல் அதை தொந்தரவு போலவே நினைத்து பயணம் செய்வதையும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்களும் சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் விதமாக புதிய திட்டம் ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கையில் எடுத்துள்ளது. அதாவது, பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டாலும் அலாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும் வசதியை கார் உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயம் தங்கள் கார்களில் வைக்க வேண்டும் என்பதே.
புதிய மாடல் கார்களில் இந்த வசதி: தற்போது கார் டிரைவர் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் அணியாவிட்டால் இந்த அலாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும். பயணிகளை கார் சீட் பெல்ட் அணிவதை நச்சரிக்கும் விதமாக இந்த அலாரம் இருக்கும். இதனால், சீட் பெல்ட்களை பெரும்பாலான பயணிகள் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில், தான் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் இந்த அலாரம் எழுப்புவதை கட்டாயம் ஆக்கி வரைவில் அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது.
இந்த அறிவிக்கை வெளியான 6 மாதத்திற்குள் கார் நிறுவனங்கள் தங்களின் புதிய மாடல் கார்களில் இந்த வசதியை கட்டாயம் ஆக்க வேண்டும். மத்திய அரசு வெளியிடப்போகும் புதிய அறிவிக்கையில், ரியர் சீட் பெல்ட் அலாரம் பற்றி மட்டுமே இருக்கும் வேறு எதைப்பற்றியும் இல்லை என்றும் சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறினார்.
கட்டாயம் என்ற ஷரத்துடன்: முன்னதாக, பின் இருக்கைகளில் மூன்று பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் ஆறு ஏர் பேக்குகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. பின் இருக்கைகளில் சீட் பெல்ட் அலாரம் வசதி கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தாலும் அது கட்டாயம் என சொல்லப்படவில்லை. இனி கட்டாயம் என்ற ஷரத்துடன் புதிய அறிவிக்கை வெளியாக உள்ளதாம்.












Click it and Unblock the Notifications