மெகா ஜாக்பாட்! வெறும் பெயருக்கு கோடிகளில் புரளும் அந்த 11 ஆயிரம் பேர்.. அது எப்படி தெரியுமா
டெல்லி: எதிர்பாராத விதமாக கிடைக்கும் லாட்டரி சீட்டு தனி நபர்களின் வாழ்க்கையை மாற்றலாம்! ஆனால் ஒரு நாட்டையே மாற்றிய கதையை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா!
ஒரு தனியாளுக்கு லாட்டரி அடிக்கிறது இயல்பு. அதே லாட்டரி ஒரு நாட்டுக்கே கிடைச்சா...? பசிபிக் கடலோர தீவுகளில் ஒன்பது தீவுகள் ஒன்றிணைந்த துவாளு (Tuvalu) என்ற நாட்டுக்குதான் அந்த லாட்டரி கிடைத்தது.
குறிப்பாக, லாட்டரி கிடைத்ததன் காரணம் அந்த நாட்டில் பெயரால்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா...!ஆம், துவாலு என்ற பெயர் மட்டும் அந்த நாட்டின் பொருளாதாரத்தில் 5 மில்லியன் டாலர்கள் பங்களிப்பை வழங்கி வருகிறது.

ஒரு பொன்மாலைப் பொழுதில்
90கள் என்பது, உலகளவில் கணினியும், இணையமும் வளர்ந்து வந்த அதிகமாகிவந்த காலகட்டம் என்றே கூறலாம். 1995ஆம் ஆண்டு, துவாலு அரசு அலுவலகத்தில் ஒரு அதிகாரியும், அங்கிருந்தவர்களும் அங்கிருந்த ஃபேக்ஸ் மிஷினை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த மாலைப்பொழுதில் வந்த ஃபேக்ஸ் தான் அந்த லாட்டரி என்பது அந்த நாட்டில் இருந்த யாருக்கும் அப்போது தெரியாது.

2 எழுத்து மந்திரம்
துவாலு நாட்டின், யூஆர்எல் எக்ஸ்டேன்ஷன் (URL Extension) குறித்துதான் அந்த ஃபேக்ஸ் வந்துள்ளது. அதாவது www.incometax.gov.in என்பது ஒரு யூஆர்எல். இதில், '.in'என்பது யூஆர்எல் எக்ஸ்டென்ஷன் ஆகும். இந்த எக்ஸ்டென்ஷன், நாடுகளின் பெயர்களில் இருந்து உருவாக்கப்படும். '.in' என்ற எக்ஸ்டென்ஷன் 'INDIA' என்பதில் இருந்து ஒதுக்கப்பட்டது. இதேபோன்று அமெரிக்காவுக்கு '.us', பாகிஸ்தானுக்கு '.pk', ஆஸ்திரேலியாவுக்கு '.au' என நாடுகளின் பெயரில் இருந்து அவை உருவாக்கப்பட்டது.

ஜாக்பாட்
இதே போன்று, துவாலு நாட்டிற்கு (Tuvalu) கிடைத்த அந்த இரண்டு எழுத்து மந்திரம் தான் '.tv'. உலக முழுவதும் தொலைக்காட்சியை சுருக்கமாக குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை 'TV'. இந்த எக்ஸ்டென்ஷனை எந்தவொரு ஒரு நிறுவனமும் தங்களுடைய யூஆர்எல்-இல் பயன்படுத்த விரும்பினால், அது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்.

எப்படி
உலக முழுவதும் புழக்கத்தில் இருக்கும் இந்த TV என்ற வார்த்தையை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. Netflix போன்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் உதாரணமாக கூறலாம். அதாவது பொதுவாக வீடியோ பார்க்கும் விரும்புவோர் tv என்றே டைப் செய்வார்கள். இதனால் பல ஸ்ட்ரீமிங் தளங்களும் .tv என்ற எக்ஸ்டென்ஷனில் தளங்களை உருவாக்க தொடங்கின.

ஐநா சபை உறுப்பினரான கதை
இது தான் அந்த ஜாக்பாட். இருப்பினும், இதை வைத்து எப்படி பணம் சம்மாதிக்கலாம் என்பது அந்த நாட்டில் இருந்த யாருக்கும் தெரியவில்லை. இதனால் '.tv' என்ற எக்ஸ்டெஷனை பயன்படுத்த, ஐடியா லேப் என்ற ஓர் அமெரிக்க நிறுவனம், துவாலு நாட்டு அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டது. அந்த ஒப்பந்ததின்படி, அந்த நிறுவனம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை வைத்துதான் அவர்கள் ஐநா சபையின் உறுப்பினர் அந்தஸ்தை பெற்றார்கள். அந்தளவுக்கு தான் துவாலு பொருளாதாரம் அப்போது இருந்தது

காசு மேல காசு
அதை தொடர்ந்து, வெரிசைன் என்ற நிறுவனத்துடன் துவாலு அரசு கைக்கோர்த்தது. அந்த வெரிசைன் நிறுவனம் ஆண்டுக்கு 5 மில்லியன் டாலரை துவாலுக்கு வழங்கிவருகிறது. இந்த வெரிசைன் யூஆர்எல் லைசன்ஸை நிர்வகிக்கும் நிறுவனமாகும். சமீபத்தில், வீடியோ கேம்ஸ் வடிவைமைக்கும் TWITCH நிறுவனம், தன்னுடைய எக்ஸ்டென்ஷனாக TWITCH.TV என்பதை வெரிசைன் நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கியது. கூடுதலாக, TWITCH நிறுவனத்தை அமேசான் நிறுவனம் கைக்கொண்டதால், அதன் மதிப்பு உச்சத்தை அடைந்துவிட்டது. இதனால், துவாலு நாட்டிற்கு கிடைக்கும் ராயல்டி தொகையும் உயர்ந்துள்ளது.

99% கல்வியறிவு
துவாலு மக்கள் மீன் பிடித்தலை அடிப்படை ஆதாரமாக வைத்திருந்ததன் காரணமாக, அவர்கள் எப்போதும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர். நம்மூரைப் போலவே அங்கும் கட்டாய கல்வி திட்டம் மூலம், 18 வயதை தாண்டியவர்களில் 99 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் உயர்ந்து வரும் கடல் மட்டத்தால் துவாலு நாடும் பாதிப்பிற்குள்ளாகிறது. அதில் இருந்து தப்பிக்கவும் இந்த லாட்டரி தான் அவர்களுக்கு உதவுகிறது.

நகைமுரண்
அவர்களின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றி வரும் இந்த தொகையை வைத்துதான் அவர்கள் மருத்துவம், கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றில் பயன்படுத்துகின்றனர். மொத்தமாக, 11,750 மக்கள் மட்டுமே வசிக்கும் அந்த நாட்டில் ஒரு விமான நிலையம், ஒரு மருத்துவமனை, ஒரு வங்கி, ஒரு நீண்ட நெடுஞ்சாலை இருக்கிறது. இணையம் மூலம் இவ்வளவு பெரிய வருமானத்தை ஈட்டி வரும் அந்த நாட்டினருக்கு இன்னும் கூட சரியான இணைய வசதிக் கூட வரவில்லை. தற்போதுவரை அவர்கள் டிஷ் ஆண்டனாக்கள் மூலமாகவே இணைய சேவையை பெறுகின்றனர் என்பது நகைமுரண்!












Click it and Unblock the Notifications