இந்தியா பாகிஸ்தான் எல்லையிலும் தவெக பாடலா?.. 14 நொடிகள் ஒலித்த “உங்க விஜய் நா வரேன்” பாட்டு!
அமிர்தசரஸ்: இந்தியா- பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகாவில் தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. அப்போது தவெக கட்சிப் பாடல் சில விநாடிகள் ஒலிபரப்பப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள் ஆனதை நாடு முழுவதும் பொதுமக்கள் இன்று உற்சாமகாகக் கொண்டாடினர். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதேபோல, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் உள்பட அந்தந்த மாநில முதல்வர்களும் மூவர்ணக் கொடியை ஏற்றி, மரியாதை செய்தனர்.

இன்று மாலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி - வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, முப்படை வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு, தேசியக் கொடியை இறக்கினர். இதனை உற்சாகமாக பார்த்து ரசித்த மக்கள், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என உரக்க முழங்கி கரகோஷம் எழுப்பினர்.
எல்லை பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது, தவெக கட்சிப் பாடல் சில விநாடிகள் ஒலிபரப்பப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரப் பாடலான "உங்க விஜய் நா வரேன்.." பாடல் 14 நொடிகள் ஒலிபரப்பப்பட்டது.
இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகாவில் தேசியக்கொடி இறக்கும் நிகழ்வின்போது தவெக கட்சிப் பாடலின் சில நொடிகள் ஒலிபரப்பப்பட்டது கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
