ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு! டெல்லி காங்கிரஸில் பிரளயம்-மேலும் 2 'தலை'கள் கட்சியை விட்டு ஓட்டம்!
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியை விட்டு ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். டெல்லி மூத்த காங்கிரஸ் தலைவர், பார்வையாளர் நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
பாஜகவுக்கு எதிரான "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பஞ்சாப் மாநில தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றன. டெல்லியில் இணைந்து போட்டியிடுகின்றன.

ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு டெல்லி காங்கிரஸில் கடும் எதிர்ப்பு வெடித்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நிருந்த அரவிந்த் சிங் லல்வி அண்மையில் தமது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அனுப்பிய கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறை சென்றுள்ளனர். அதே கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இதனை கட்சித் தொண்டர்கள் விரும்பவில்லை. டெல்லி காங்கிரஸ் தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க முடியாத நிலையில் தலைவர் பதவியில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை. ஆகையால் ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்திருந்தார். மேலும் வடமேற்கில் உதித் ராஜ், வடகிழக்கு டெல்லியில் கண்ணையா குமார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதற்கும் அரவிந்த் சிங் லவ்லி அதிருப்தி தெரிவித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. அரவிந்த் சிங் லவ்லியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதனையடுத்து டெல்லி காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்திர யாதவ் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் டெல்லி காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி பார்வையாளரான நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோரும் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது டெல்லி காங்கிரஸில் பெரும் பிரளயம் மையம் கொண்டிருப்பதையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இருவரும் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏக்கள். இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இருவரும் தனித்தனியே கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில், டெல்லி காங்கிரஸ் கட்சியினரின் சுயமரியாதை தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையில் கட்சியில் தொடர முடியாத நிலைமை உருவாகி உள்ளது என சுட்டிக்காட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications