நாடாளுமன்றம் வேண்டாம்.. மாநிலங்கள் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் பாஜக! என்ன காரணம்?
டெல்லி: 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக தலைமையிலான என்டிஏ ஆட்சி நடைபெறும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜகவின் நீண்டகால இலக்குகளில் ஒன்றாக பொது சிவில் சட்டம் இருக்கும் நிலையில், அதை மத்திய அரசு நாடாளுமன்றம் மூலம் நாடு முழுவதும் ஒரே சட்டமாக கொண்டு வருவதற்கு பதிலாக, மாநிலங்கள் வழியாக முன்னெடுத்து வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
பாஜகவை பொறுத்தவரை அக்கட்சி தனது நீண்ட கால இலக்குகளாக சில விஷயங்களை வைத்திருந்தது. அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு நீக்கம் ஆகியவற்றை பாஜக செய்து காட்டிவிட்டது. இதில் பொது சிவில் சட்டம் மட்டுமே இன்னும் நிறைவேற்றப்படாத முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் என்பது ஆர்எஸ்எஸ் நீண்டகாலமாக இலக்காக இருக்கிறது. இருப்பினும் அதை எப்போது, எப்படி அமல்படுத்த வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ் சற்று எச்சரிக்கையாகவே இருந்துள்ளது. நாடாளுமன்றம் மூலம் சட்டம் இயற்றி நாடு முழுக்க ஒரே சட்டமாக நிறைவேற்றுவதற்குப் பதிலாக மாநிலங்கள் மூலம் கொண்டு வரவே ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. அதாவது முதலில் பாஜக ஆளும் மாநிலங்கள் தங்களுக்கான பொது சிவில் சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அதன் பின்னர் மத்திய அளவில் நாடு முழுவதற்குமான சட்டம் குறித்து கொண்டு வர வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் திட்டமாக இருக்கிறது.
காரணங்கள்
இதற்கு அரசியலமைப்பு ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி வலுவான காரணங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, உயில், வாரிசுரிமை, சொத்துரிமை மற்றும் கூட்டு குடும்ப விவகாரங்கள் ஆகியவை அரசியலமைப்பின் பொது பட்டியலில் உள்ள என்டரி 5ன் கீழ் வருகின்றன. எனவே, இந்த விவகாரங்களில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கும் சரி, மாநில சட்டசபைக்கும் சரி அதிகாரம் உள்ளது.
இரண்டிற்குமே அதிகாரம் இருக்கும் போது ஏன் சட்டசபை என்று கேள்வி வரலாம். அரசியல் ரீதியாந காரணமே அதில் முக்கியமானது. இந்தியாவில் தனிநபர் சட்டங்கள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளில் மிக பெரிய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக பழங்குடியின மக்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தனித்துவமான பழக்கவழக்கங்களைக் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.
மிக பெரிய சவால்
நாடு முழுவதற்கும் ஒரே சட்டத்தை ஒரே நேரத்தில் கொண்டுவரும்போது, இந்த அனைத்து வேறுபாடுகளையும் எதிர்கொள்வது அரசியல் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக மிக பெரிய சவாலாக இருக்கும். அதற்கு பதிலாக மாநிலங்கள் வழியாக நிறைவேற்றும் போது உள்ளூர் பழக்க வழக்கங்களை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப பட்டங்களை உருவாக்க முடியும். இதன் மூலம் நாடு முழுவதற்குமான சட்டத்தை கொண்டுவரும்போது ஏற்படும் சிக்கல்களை முதலில் மாநில அளவில் கையாள முடியும்.
4 மாநிலங்கள்
இதுவரை நான்கு பாஜக ஆளும் மாநிலங்கள்- உத்தரகாண்ட், குஜராத், அசாம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொது சிவில் சட்டம் தொடர்பான சட்டம் வரப்பட்டுள்ளது. இதில் பொது சிவில் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள ஒரே மாநிலம் உத்தரகாண்ட் மட்டுமே! 2025 ஜனவரியில் உத்தரகாண்ட் அமல்படுத்திய பொது சிவில் சட்டத்தில் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை உள்ளிட்டவற்றுக்கு பொதுவான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பலதார மணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திருமணப் பதிவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று லிவ் இன் தொடர்பான விதிகள். இதுபோன்ற உறவுகளை பதிவு செய்வதுடன், அந்த உறவு முடிவடைந்தாலும் அதைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், அத்தகைய உறவில் பிறக்கும் குழந்தைகள் சட்டப்பூர்வமான குழந்தைகளாக அங்கீகரிக்கப்படுகின்றனர். குஜராத், அசாம், மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் தொடர்பான சட்டம் இருந்தாலும், அது இன்னும் அமலுக்கு வரவில்லை.
இதுதான் முக்கியம்
இந்த நான்கு மாநிலங்களின் பொது சிவில் சட்டம் சட்டங்களிலும் குறிப்பிடத்தக்க பொதுவான அம்சம் ஒன்று உள்ளது. அதுதான் பட்டியலின பழங்குடியினர் இந்த சட்டங்களிலிருந்து விலக்கு அளிப்பது.! இந்த அம்சம் நாடு முழுவதும் ஒரே பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களையும் காட்டுகிறது. ஏனென்றால் பழங்குடியின மக்களுக்கு எப்போதுமே தனித்துவமான பழக்கவழக்கங்கள் இருக்கும். அதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
அதேபோல பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் கூட பொது சிவில் சட்ட விவகாரத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில் இல்லை. ஐக்கிய ஜனதா தளம் தாங்கள் பொது சிவில் சட்டத்துக்கு எதிரானது அல்ல என்று தொடர்ந்து கூறி வந்தாலும், அது கட்டாயப்படுத்தப்படாமல் ஒருமித்த கருத்து அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. தெலுங்கு தேசம் கட்சியும் பொது சிவில் சட்டம் தொடர்பாக ஒருமித்த கருத்து முதலில் தேவை என கூறியுள்ளது.
அரசியலமைப்பு என்ன சொல்கிறது?
இந்திய அரசியலமைப்பின் 44வது பிரிவு, "இந்தியாவின் முழு பகுதிக்கும் பொது சிவில் சட்டத்தை உறுதி செய்ய அரசு முயற்சி செய்ய வேண்டும்" என்று கூறுகிறது. ஆனால், இது அடிப்படை உரிமைகளின் கீழ் வருவதில்லை. இது அரசின் கொள்கையை வழிநடத்தும் Directive Principles of State Policyல் தான் இடம்பெற்றுள்ளது. அதாவது ஆலோசனை என்ற அடிப்படையிலேயே வருகிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டே நாடு முழுவதும் ஒரே சட்டத்தை ஒரே கட்டத்தில் கொண்டு வருவதற்கு பதிலாக, மாநிலங்கள் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக- ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
