உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சிவி சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை கிடையாது உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில்தான் இருக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், அதிமுக எம்பி சிவி சண்முகத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக எம்பி சிவி சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுத் திட்டங்களின் பெயர்களில் வாழும் ஆளுமைகளின் பெயர்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கூறி இடைக்கால தடை விதித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில், வில்சன் மற்றும் முகுல் ரோஹ்தகி ஆகியோர் பல்வேறு வாதங்களை முன் வைத்தனர்.
அதிமுக தரப்பிலும் பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இறுதியாக இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடையில்லை. அரசியல் மோதலை தீர்த்துக் கொள்வதற்கு நீதிமன்றத்தை மேடையாக பயன்படுத்தக் கூடாது. அரசியல் பிரச்சனையை தேர்தல் களத்தில் தான் பேசிக் கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறோம். அரசியல் சண்டைக்கு இதுதான் இடமா?
குறிப்பிட்ட ஒரு ஆட்சியின் திட்டத்தை எதிர்க்கும் உங்களின் நோக்கம் உள்நோக்கம் கொண்டது. சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு அதிமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது என்று தெரிவித்தனர். மேலும், வழக்கு தொடர்ந்த அதிமுக எம்பி சிவி சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த அபராதத்திற்கு சிவி சண்முக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்த போது ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கவா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி அதிர்ச்சி கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் ஒரு வாரத்திற்குள் சிவி சண்முகம் ரூ.10 லட்சம் அபராதத்தை செலுத்தாவிட்டால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று தீர்ப்பளித்துள்ளனர். நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் பெயரில் 45 திட்டங்கள் உள்ளதாக அபிஷேக் மனு சிங்வி பட்டியலிட்டார்.
அதேபோல் திமுக தரப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு அரசியல் ரீதியிலானது. அரசு திட்டங்களை மக்களிடம் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 20 திட்டங்களுக்கு அம்மா என்ற ஒரே பெயரில் தான் செயல்படுத்தியுள்ளனர் என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications