குட்நியூஸ்.. அதிகரிக்கும் சமையல் எரிவாயு விலையை 10% குறைக்க முடிவு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் (கியாஸ் சிலிண்டர்) விலை உயர்வால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை சமையல் எரிவாயு விலை குறைய வாய்ப்புள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை 24 மணிநேரத்துக்கு ஒருமுறையும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம் ஒருமுறையும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் கூட அவ்வப்போது சமையல் எரிவாயுவின் விலை மட்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மக்களின் மாதாந்திர பட்ஜெட் மக்களின் கையை கடிக்கிறது.
இந்நிலையில் தான் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் நிலையான விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அமைச்சரவை நேற்று திருத்தப்பட்ட சமையல் எரிவாயு விலை நிர்ணய வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றியும், அதன் சாதகமான அம்சங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். இதுபற்றி அனுராக் தாகூர் கூறியதாவது:

‛‛இந்தியாவில் சமையல் எரிவாயு விலையை உறுதி செய்யவும், சந்தை ஏற்ற இறக்கங்களின்போது உற்பத்தியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கும் வகையில் மாதாந்திர அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சமையல் எரிவாயு விலை என்பது சர்வதேச ஹப் எரிவாயு விலைக்கு பதிலாக, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு எரிவாயுவின் விலை இந்திய கச்சா எண்ணெயின் சர்வதேச விலையில் 10 சதவீதமாக இருக்கும். இந்த விலை என்பது மாதந்தோறும் அறிவிக்கப்படும்'' என்றார்.
இதன்மூலம் குழாய் வழியாக வினியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு( Piped Natural Gas அல்லது PNG) விலை 10 சதவீதம் வரையும், சிஎன்ஜி(Compressed Natural Gas) விலை 6 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் நிலையில் விலை குறைப்பு நடவடிக்கை நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
